சென்னை:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடர் நடைபெற உள்ளது. சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்படுவது இது முதன்முறையாகும். இந்நிலையில் இந்தத் தொடாருக்கு இந்தியாவில் இருந்து 13 போட்டியாளர்கள் நேரடி தகுதி பெற்றுள்ளனர். தரவரிசையின் அடிப்படையில் இவர்கள் தேர்வாகி உள்ளனர்.
ஏற்கெனவே இரு முறை இந்தியாவில் நடைபெற்ற டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் பங்கேற்ற இந்திய போட்டியாளர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். மார்ச் 25-ம் தேதி தொடங்க உள்ள இந்தத் தொடரில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டொமோகாசு ஹரிமோடோ, 5-வது இடத்தில் உள்ள ஹினா ஹயாடா தலைமையில் வலுவான வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளும் களமிறங்குகின்றனர்.
‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை’ தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரதான டிராவில் 48 பேர் இடம் பெறுவார்கள். அதே நேரத்தில் இரட்டையர் பிரதான டிராவில் (ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு) 16 ஜோடிகள் இடம் பெறும். இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.39 கோடியாகும். சாம்பியன்களுக்கு 600 புள்ளிகளும் வழங்கப்படும்.
மகளிர் ஒற்றையர் பிரிவு பிரதான டிராவில் இந்திய நட்சத்திரங்களான மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அய்ஹிகா முகர்ஜி, யஷஸ்வினி கோர்படே இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பிரதான டிராவில் ஜாம்பவான் சரத் கமல் தலைமையில் மானவ் தாக்கர், சத்தியன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் ஆகியோர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் ஸ்டார் கன்டென்டர் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4 இந்தியர்கள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.