புதுடெல்லி, ஏப்.19
வாகன ஓட்டுநர்களுக்கு எட்டு மணி நேரம்தான் பணி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம்உத்தரவிட் டுள்ளது.
உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைக்க வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்து, அனைத்து நாடுகளும் நடவடிக்கைகளை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
உச்சநீதிமன்றம்உத்தரவு
இந்த சூழலில் தான், சாலை விபத்துகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நாட்டில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலை விபத்துகளால் பாதிப்படும் நபர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில், விரைவான நெறிமுறைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உருவாக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6 மாதங்களுக்குள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
8 நேர பணி
மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 91 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்கள் விதிகள் 1961ன்கீழ், ஒருநாளைக்கு ஒரு ஓட்டுநர் 8 மணி நேரம் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும். அதேபோல் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணி செய்ய வேண்டும் என்ற விதிகளை அமல்படுத்த வேண்டும். சாலை விதிகள் தொடர்பான சட்டம் அடிக்கடி மீறப்படுகிறது. இதனால் தான், சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்து ஆலோசித்து இதுகுறித்து உத்திகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
==