தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரா.சுப்பராயலு மேலாண்மையியல் அறக்கட்டளை மற்றும் துணைப் பதிவாளர் முனைவர் இரா.முரளி, முனைவர் இரா.உமாமகேசுவரி அறக்கட்டளை சார்பில், அலுவல்நிலைப் பணியாளர்களுக்கான, ‘பணி விதிகள் அறிவோம்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையை பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் முனைவர் சி.அமுதா, முனைவர் மருத்துவர் பெ. பாரதஜோதி ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். பயிற்சியாளராக செயல்பட்ட உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை துணை இயக்குநர் (ஓய்வு) சி.பாலன் பேசுகையில், எந்த ஒரு பணிக்கான பணிநியமனம் குறித்தும், அது தொடர்பான பணியாளருக்கான பணிப்பதிவேடுகள் பதிவு செய்வது முதல், ஓய்வு பெறுவது வரை அலுவல் நிலைப் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய அலுவலக நடத்தை விதிகள் குறித்து மிகத் தெளிவாக விளக்கம் அளித்தார். குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி (த) உதவி இயக்குநர் / நிதியாளர் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத் திட்டக்குழு உறுப்பினருமான முனைவர் எம்.ராஜாராமன், பணி விதிகள் குறித்த விரிவான விளக்கமளித்து பேசினார். நிதியலுவலர் ம. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு. முருகன் இணைப்புரை வழங்கினார். நிறைவாக, கண்காணிப்பாளர் த.இராசராசன் நன்றி கூறினார்.