tamilnadu epaper

தலைமையாசிரியர்

தலைமையாசிரியர்

மாணிக்கம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தன்னுடைய இளைய மகளான அஞ்சலிக்கு படிப்பு முடிந்ததும் பல வரன்களை பார்த்து கடைசியாக வெளிநாட்டில் வேலை செய்யும் என்ஜினீயர் மாப்பிள்ளை கௌதமிற்கு திருமணம் நிச்சயம் பேசி முடித்து இருந்தார். வீடே திருமணக்கலைப்பூண்டிருந்தது. அஞ்சலியின் அம்மா மரகதம் மட்டும் அடுக்களையில் நின்று ஓடிப்போன தன் மூத்த மகனை நினைத்து கண்கலங்கி கொண்டிருந்தாள். 

 

மரகதம் மரகதம் என்று மாணிக்கம் அழைக்கும் குரல் கேட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

 

என்னங்க என் பேர ஏலம் விடுறீங்க என்ன விஷயம் என்று கேட்டாள்

 

கல்யாணம் வேற நெருங்கிக்கிட்டு இருக்கு கல்யாணச் செலவுகளுக்கு என்னோட ஓய்வூதியப் பணத்தை மொத்தமாக பேங்க்ல போட்டு வெச்சி இருக்கேன்ல அதை முழுசா எடுத்துட்டு வந்து மண்டபம் பாத்து முன் பணம் கொடுக்கணும், சமையல் காண்ட்ராக்டர் பாலுவை பார்த்து மெனு சொல்லணும், துணி மணிகள் எடுக்கணும்,பத்திரிக்கை அடிக்கணும் என்று எல்லா வேலையும் நான் தானே தனியா செஞ்சாகனும் என்று பொருமினார். 

 

ஆமாங்க இப்போ நம்ம பையன் மட்டும் நம்ம கூட இருந்தா நீங்க இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை இல்ல என்றாள்

 

உடனே கோபத்தோடு அந்த திருட்டு நாயைப்பத்தி பேசாத சொல்லிட்டேன்னு கத்தியபடி ஹாலுக்கு வந்து ஷோபாவில் அமர்ந்தார்.

 

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு மரகதம் சொம்புல குடிக்க தண்ணீர் எடுத்து வாம்மா என்று மனைவியை அழைத்தார். 

 

மரகதம் கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு நான் பேங்க் போயிட்டு பணம் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு பணத்தை வைத்து எடுத்துவர கைப்பை ஒன்றையும் எடுத்துக்கொண்டார். 

 

பார்த்துங்க மொத்த பணத்தையும் எடுத்துட்டு வரபோறீங்க. ஜாக்கிரதையா கொண்டு வாங்க பணத்தை வெச்சிக்கிட்டு எங்கயும் நின்னு பேசிக்கிட்டு நிக்காதீங்க. காலம் கெட்டு போய் கிடக்குது என்று கணவனை எச்சரிக்கை செய்து அனுப்பினாள் மரகதம்.

 

மாணிக்கம் குடையை விரித்து நடந்து சென்றார். பேங்க் கிளை இருக்கும் அண்ணா நகர் நிறுத்தத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறி டிக்கெட் வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். 

பஸ் நின்றதும் பேங்க் வரை நடந்து சென்று மேனேஜரை பார்த்து மொத்த பணத்தையும் எண்ணி இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளாக வாங்கி கைப்பைக்குள் வைத்துக்கொண்டார். மேனேஜருக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பி நடந்தார். வெயில் உச்சியை தொட்டுக்கொண்டு இருந்தது. மீண்டும் பஸ் நிலையத்துக்கு வந்தார் நா வறண்டு தண்ணீர் தாகம் எடுத்தது. அருகே குளிர்பானங்கள் விற்கும் கடைக்கு வந்து ஜில்லென்று எலுமிச்சை ஜூஸ் கேட்டார்.

அங்கே பெண்கள் கும்பலாக நின்று கொண்டு சத்தமாக பேசி சிரித்தப்படி ஜூஸ் குடித்துக்கொண்டு இருந்தார்கள். கடைக்காரர் தந்ததும் குடித்துவிட்டு டம்ளரையும் பணத்தையும் கொடுத்து விட்டு மாணிக்கம் தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு குடையை விரித்து நடக்கத்தொடங்கினார். பஸ் நிலையம் அருகே வந்தப்பிறகு தான் கைப்பையை பற்றிய சிந்தனையே வந்தது. 

 

ஐயோ கைப்பையை குளிர்பானக்கடையிலேயே தவறவிட்டுவிட்டேனே கடவுளே இந்நேரம் யாரு எடுத்துட்டு போய் இருப்பார்களோ, மரகதம் சொன்னது மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன், அஞ்சலியின் திருமணம் அவ்வளவு தானா என்றெல்லாம் சிந்தை ஓடியதில் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது மாணிக்கத்துக்கு 

 

ஐயா ...ஐயா என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தார் திருநங்கை ஒருவர் அவர் தவறவிட்ட கைப்பையை அவர் கையில் கொடுத்து ஐயா நீங்க கடையில மறந்து வெச்சுட்டு வந்திட்டீங்க நீங்க போனப்பிறகு தான் நான் பார்த்தேன் அதான் உடனே எடுத்துக்கொண்டு வந்தேன் என்று மாணிக்கம் கையில் பணமிருந்த கைப்பையை திணித்தார். 

 

நன்றியோடு அந்த திருநங்கையின் முகத்தை பார்த்தார். சிறு வயதில் சட்டைப்பையில் பணத்தை திருடி விட்டான் என நினைத்து அடித்ததற்கு வீட்டை விட்டு ஓடிப்போன மகன் கார்த்திக். குற்றஉணர்ச்சியோடும் ஆனந்தக்கண்ணீரோடும் கார்த்திக்கை அணைத்துக்கொண்டார்.

 

மாணிக்கத்தின் பாரமும், வெயிலும் குறையத்தொடங்கியிருந்தது.

               மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.