அதிர்ந்தார் அரசியல் தலைவர்.
எதிரிகள் யாரோ அவரது பங்களாவில் 'பாம்' வைத்திருப்பதாக செல்போனில் தகவல் வர, நடுநடுங்கினார்.
இன்னும் சற்று நேரத்தில் சிதறிப் போகப் போகிறோமே என பதறிப் போனார்.
தான் செய்த ஊழல்களும், மக்களுக்கு செய்த துரோகங்களும் மனதில் நிழலாடின.
'பாவத்தின் சம்பளம் மரணமோ?'... மக்களுக்கு நன்மை செய்திருந்தால் மகேசன் மன்னிச்சிருப்பாரோ?' போன்ற எண்ணங்கள் வந்து போனது.
ஏசி அறையிலும் வியர்த்துக் கொட்டியது.
தன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என மனதிற்குள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டார்.
மீண்டும் செல்போன் அழைப்பு.
பயத்துடன் எடுத்தார்.
" தலைவரே... மிக அவசரம். அவகாசம் இல்லே... நாங்கள் வந்து 'பாமை' செயலிழக்கச் செய்யும்முன் 'பாம்' வெடித்து விடும்..."- எதிர்முனைக்குரல்
'' என்ன சொல்றீங்க? இப்ப நான் என்னதான் செய்யறது? செத்துதான் தொலையணுமா?"- தலைவரின் குரலில் பதற்றம் தொற்றிக் கொண்டது.
" உங்க படுக்கை அறையில் தான் 'பாம்' இருக்கு. முதல்ல அதைத் தேடிக் கண்டுபிடிங்க... அதுல உள்ள சிவப்பு ஒயரை உடனே கட் பண்ணுங்க. சீக்கிரம்... சீக்கிரம்... இன்னும் பத்து நிமிஷங்கள் தான் இருக்கு. நாங்களும் வந்துக்கிட்டே இருக்கோம்... பயப்படாதீங்க..."
தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அறை முழுக்கத் தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. கடைசியில் கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்க்க வெடிக்கத் தயாராய் 'பாம்'.
இன்னும் இரண்டே நிமிடங்கள்...
ஆப்பிள் நறுக்க வைத்திருந்த கத்தியை கையில் எடுத்துக்கொண்டு 'பாமை' நெருங்கியவர், பல வண்ண ஒயர்களில் எது சிவப்பு ஒயர் என குழம்ப ஆரம்பித்தார்-
தனக்குள்ள 'நிறக் குருட்டுத்தன்மை'யால்.
*- ரிஷிவந்தியா,தஞ்சாவூர்.*