சென்னை:
துபாய் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா என இந்திய கிரிக்கெட் அணியினரை நோக்கி எழுப்பப்படும் கேள்வி நியாயமானது அல்ல என விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
“பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை நோக்கி நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘இந்தியா துபாய் மைதானத்தில் மட்டும் ஆடுவது சாதகமா?’ என்ற கேள்வி நியாயமானது அல்ல. இந்திய அணி தரமான கிரிக்கெட் ஆடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணி இந்த தொடரை நடத்துகிறது. அந்த உரிமையை எந்த காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சொல்லிவிட்டது. அது போல இந்திய அணியும் பாகிஸ்தானில் ஆட மறுத்துவிட்டது. அதனால் இந்தியா ஆடும் போட்டிகள் பொதுவான மைதானத்தில் நடைபெறுகிறது. ஐசிசி அதை அனுமதித்துள்ளது. ஐசிசி நடத்தும் தொடர்களில் தொடர்ச்சியாக மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் வந்து தொடரை 0-4 என இழக்கும் வெளிநாட்டு அணிகள் ஆடுகளத்தின் மீது குற்றம் சுமத்துகின்றன. தரமான கிரிக்கெட் ஆடும் அணி மீது இது மாதிரியான கேள்விகளை கேட்பது நியாயம் அல்ல. இந்தியா வெற்றி பெற்றால் இது மாதிரியான சாயம் பூசுவதும், தோல்வியை தழுவினால் கடுமையாக விமர்சிப்பதும் அவர்களது வாடிக்கை” என அஸ்வின் கூறியுள்ளார். இதை வீடியோவாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
“ஒவ்வொரு முறையும், துபாய் ஆடுகளம் வெவ்வேறு சவால்களைக் கொடுக்கிறது. நாங்கள் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும், ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. இது எங்கள் சொந்த மண் மைதானம் இல்லை, துபாய். நாங்கள் இங்கு அதிக போட்டிகளில் விளையாடுவதில்லை, இது எங்களுக்கும் புதிதுதான். இங்கு நான்கைந்து ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது.