சென்னை, பிப்.20-
தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 158 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.35 கோடி ஊக்கத்தொகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
38-வது தேசிய விளையாட்டு போட்டி ஜனவரி 28-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது. நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டியில் சர்வீசஸ் (முப்படை) 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என்று 92 பதக்கங்களுடன் 6-வது இடம் பெற்றது. தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதில் தடகளத்தில் 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கம், வாள்வீச்சில் 4 தங்கம், ஒரு வெள்ளி, வெண்கலம் என 6 பதக்கம், நீச்சலில் 3 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கம் வென்றதும் அடங்கும்.
இந்த நிலையில் தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது.
இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, தேசிய விளையாட்டில் தனிநபர் மற்றும் குழு போட்டியில் பதக்கம் வென்ற 158 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.
நீச்சலில் 2 தங்கம் உள்பட 6 பதக்கத்தை அள்ளிய நெல்லை வீரர் பெனெடிக்டன் ரோகித் ரூ.15½ லட்சமும், தடகளத்தில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற கோவை வீராங்கனை வித்யா ரூ.8 லட்சமும் ஊக்கத்தொகையாக பெற்றனர்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘தேசிய விளையாட்டு போட்டி நடந்து முடிந்து ஐந்தே நாட்களில் உங்களுக்கு இந்த உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. எப்படி நீங்கள் சாதனை படைத்து இருக்கிறீர்களோ அதேபோல் தமிழ்நாடு அரசும் விரைவாக ஊக்கத்தொகை வழங்கி சாதனை படைத்து இருக்கிறது. இந்தியாவிலேயே இந்த மாதிரி வெற்றி பெறும் வீரர்களை உடனுக்குடன் சிறப்பிக்கின்ற மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். 2023-ல் நடந்த தேசிய விளையாட்டில் தமிழகம் 10-வது இடத்தில் இருந்தது. இன்றைக்கு முன்னேறி 6-வது இடத்துக்கு வந்திருக்கின்றோம். சீக்கிரமே முதலிடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை உங்களை பார்க்கின்ற போது இருக்கிறது. அது உங்கள் கையில் தான் இருக்கிறது. அதற்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். இந்த அரசு அதனை செய்து தருவதற்கு தயாராக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, துணைத் தலைவர்கள் எம்.ராமசந்திரன், அசோக் சிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.