கண்ணிருந்தும் குருடாய்..
காதிருந்தும் செவிடாய்..
வாயிருந்தும் ஊமையாய்..
செயலிழந்து பரபரக்கும்
செயற்கையான வாழ்க்கையே
நரகமெனும் நகர வாழ்க்கை !
அடுக்கு மாடியில் ஒதுங்கி
தன்வீட்டு அடையாளம் தவிர
அண்டை வீட்டினரை யறியார் !
அவசர உதவியும் புரியார் !
கடிவாளமும் கண்மூடியுமிட்டக்
குதிரையாய் சுற்றுப்புறமு மறியார் !
தன்வீடு தன்பெண்டு தன்பிள்ளையென
தனித் தீவாய் வாழ்வார்!
பண்டிகை நாட்களெல்லாம்
பெட்டிக்குள் அடக்கமே!.....ஆம்
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்
தொலைந்து போனாரே நகரத்தில்!
உறவுகள்.. நட்புகள்...
விரல்நுனியின் விசாரிப்பில்!
கைபேசி இணைத்திடும் உணர்வினைப்
பொய்பேசும் எந்திரமாய்....!
நகரவாழ்க்கை மாறாவிடில்
நரகம் புவியில் நிரந்தரமாகும்!
ஓசூர் மணிமேகலை