வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி புறப்பட்ட அமெரிக்க விமானம் ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. இத்தாலி வான் எல்லைக்குள் வந்த அந்த விமானம் அந்நாட்டின் இரண்டு ஃபைட்டர் ஜெட்கள் சூழ பாதுகாப்பாக ரோமில் தரையிறக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானம் தரையிறங்கிய பின்னர் நடந்த சோதனையில் அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது.
நடந்தது என்ன? அமெரிக்காவின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிப்.22 அன்று AA292 விமானம் டெல்லி புறப்பட்டது. போயிங் ரக விமானமான அதில் 199 பயணிகளும் பைலட்டுள், விமான சிப்பந்திகள் 15 பேரும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் ரோம் நகர விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட இரண்உ மணி நேரத்திலேயே அது ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது.
விமானம் இத்தாலி வான் எல்லைக்குள் நுழைந்தபோது அந்த விமானத்துடன் இத்தாலி நாட்டின் இரண்டு ஃபைட்டர் ஜெட் விமானங்களும் சென்றன. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்துடன் அது தரையிறங்கவிருக்கும் நாட்டின் போர் விமானங்கள் செல்வது உலக நாடுகளின் பாதுகாப்பு நடைமுறைகளில் வழக்கமான ஒன்று எனக் கூறப்படுகிறது. அதன்படியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க விமானத்துடன் இத்தாலி ஃபைட்டர் ஜெட் விமானங்கள் இரண்டு பறந்துள்ளன.
பின்னர் ரோம் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு விமானம் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அதில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் அது புரளி என்பது உறுதியானது.
எனினும் விமான பைலட்டுகள், சிப்பந்திங்கள் ஓய்வைக் கருத்தில் கொண்டு ஞாயிறு இரவு அந்த விமானம் இத்தாலியிலேயே நிறுத்தப்பட்டது.