"அந்த புது வேலைக்காரனை உடனே துரத்துங்க.... நான் வரும் போது மற்ற வேலைக்காரர்களெல்லாம் செய்யற வேலையை அப்படியே விட்டுட்டு... குனிஞ்சு நின்னு...என்னைக் கும்பிடுறாங்க!... ஆனா இவன்... பார்த்தும் பார்க்காத மாதிரி தெனாவெட்டாய் இருக்கான்!... கூப்பிட்டுக் கேட்டா!... "எதுக்கு கும்பிடணும்?...ன்னு கேக்குறான்!"
"டேய்... முத்து!.. அந்தப் பையனை இங்க வரச் சொல்லுடா!" கத்தலாய்ச் சொன்னார் எம்.எல்.ஏ.சிவராசன்.
சில நிமிடங்களில், வந்து நின்றவனிடம்
"ஏண்டா நாயே!...அம்மா வரும்போது குனிஞ்சு நிக்கணும்...கும்பிடணும்!னு தெரியாதா உனக்கு?"
"அம்மா வரும் போது குனிஞ்சி நின்னு கும்பிட ... அவங்க என்ன தெய்வமா?..."
சூடாகி போன சிவராசன் "இனிமேல் உனக்கு இங்கே வேலை இல்லை!.. போடா வெளியே!"
"உங்க கிட்ட வேலை செய்ய நானும் தயாராக இல்லை!.." சொல்லி விட்டு வெளியேறினான் அவன்.
அவன் தலை மறைந்ததும், "முத்து!... இவன் இனிமேல் நிரந்தரமாக நிமிரக் கூடாது... அவனோட இடுப்பெலும்பை முறிச்சிடு... !" என்றார் சிவராசன் எம்.எல்.ஏ.
அன்று இரவே அந்த வேலையாளின் இடுப்பெலும்பை முறித்து விட்டு, தலைவருக்கு தகவல் சொன்னான் முத்து.
"சரி...சரி மீதிய நேர்ல பேசிக்கலாம் வா" சொல்லி விட்டு கட் செய்தவர், மீண்டும் மொபைல் ஒலிக்க எடுத்தார்.
"எம்.எல்.ஏ சிவராசன் சார் வீடுதானே?" எதிர்முனை கேட்டது.
"ஆமாம்... நான் சிவராசன்தான் பேசுறேன்... நீங்க?"
"சார்... நான் கோயம்புத்தூர்ல... உங்க பையன் படிக்கிற காலேஜ் ஹாஸ்டல் வார்டன் பேசுறேன்!... உங்க பையன் "சந்தோஷ்"க்கு பைக் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு!... ஜி.கே.ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி இருக்கோம்!"
"கடவுளே!.. உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே?" பதட்டமாய் கேட்டார் சிவராசன்.
"உயிருக்கெல்லாம் ஒண்ணும் ஆபத்தில்லை!...ஆனால்... இடுப்புல எக்கச்சக்கமா அடிபட்டு ஸ்பைனல் கார்டு கண்டபடி கொலாப்ஸ் ஆயிடுச்சு... ஆபரேஷன் பண்ணி சரி பண்ணியாச்சு.
ஆனாலும் அவரால் இனிமேல்... நிமிர்ந்து நிற்க முடியாது!...நிமிர்ந்து நடக்க முடியாது!..னு டாக்டர்க சொல்லிட்டாங்க!..குனிஞ்சேதான் இருப்பாராம்!"
தலை "கிர்"ரென்று சுற்றியது எம்எல்ஏ சிவராசனுக்கு.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை