நேபாளத்தில் 12 இந்தியர்களுடன் சென்ற தனியார் பயணிகள் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் 12 இந்தியர்கள் உள்பட 15 பேர் இமய மலையின் அடிவாரத்திலுள்ள ரமேசாப் நகரத்தை நோக்கி இன்று (ஏப்.16) மதியம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மதியம் 2 மணியளவில் அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரினால் தலைநகர் காத்மாண்டுவை நோக்கி அந்த விமானம் திருப்பி விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காத்மாண்டுவின் திரிபுவன் பன்னாட்டு விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அந்த விமானத்தில் சென்ற 15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் என யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அந்த விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தரையிறக்கப்பட்டதாகவும், பின்னர் ஓடுதளத்திலிருந்து நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.