tamilnadu epaper

பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்திய அற்புதமான டி20 போட்டி!

பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்திய அற்புதமான டி20 போட்டி!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் நவீன கால டி20 கிரிக்கெட்டில் காண கிடைக்காத முழுமையாக பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்திய போட்டியாக இருந்தது சற்று வியக்கவைத்தது.


ஏனெனில் ஐபிஎல் தொடர் வணிக ரீதியிலானது. இங்கு 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்படும் ஆட்டங்களையும், 10 பந்துகளில் 30 ரன்களை விளாசும் பேட்ஸ்மேன்களையுமே காண்பதற்காக ரசிகர் கூட்டம் குவிகிறது. போட்டி அமைப்பாளர்களும், ஒளிபரப்பாளர்களும், ரசிகர்களும் ரன் வேட்டையை காணவே விரும்புகின்றனர். அப்படி இருக்கும்போது பஞ்சாப், கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் கூட்டாக 20 விக்கெட்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. அதிலும் 30.4 ஓவர்களில் ஆட்டமே முடிந்துவிட்டது.


கடந்த 10 ஆண்டுகளில் குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் (டி20, 50 ஓவர் கிரிக்கெட்) பந்துக்கும், மட்டைக்கும் இடையே சமஅளவிலான போட்டி இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு. இதற்கு காரணம் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாக இருக்கும் வகையில் தட்டையான ஆடுகளங்கள் அமைக்கப்படுவதுதான். அதிலும் கடந்த சில ஆண்டுகளில் தொழில்முறை டி20 கிரிக்கெட்டில் ஆடுகளங்கள் முழுமையாக பேட்டிங்குக்கு சாதகமாகவே மாறி உள்ளன.


கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 41 முறை 200 ரன்களுக்கு மேல் வேட்டையாடப்பட்டது. இதுதவிர 10-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் 190 முதல் 199 ரன்கள் வரை குவிக்கப்பட்டிருந்தன. பேட்டிங்கில் பவர்பிளேவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஆட்டம், இம்பாக்ட் பிளேயர் விதி, பேட்டிங்கில் புகுத்தப்படும் புதுமையான ஷாட்கள் ஆகியவை பந்து வீச்சாளர்களின் நிலைமையை சொல்லொணா துயரத்துக்கு தள்ளியது.


இந்த சூழ்நிலையில்தான் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம், இருள் சூழ்ந்த நீண்ட நெடிய சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் போது மறுமுனையில் ஏதோ வெளிச்சம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் பயணிக்கும் போது தெரியும் ஒளிவிளக்காக அமைந்துள்ளது. பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதற்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களின் ஷாட் தேர்வு மற்றும் அவர்கள் அதைச் செயல்படுத்திய விதமும் ஒரு காரணமாக அமைந்தது.


தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா டீப் ஸ்கொயர் திசையில் பீல்டர் நிறுத்தப்பட்டிருப்பது தெரிந்தும் லெக் திசையில் வீசப்பட்ட பந்தை வலுவில்லாமல் பிளிக் செய்து ரமன்தீப் சிங்கிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அவுட் ஸ்விங் பந்தை டீப் பேக்வேர்டு பாயிண்ட் திசையில் அடிக்க எளிதாக கேட்ச் ஆனது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இது ஒருபுறம் இருக்க புதிர் பந்து வீச்சாளர்களான சுனில் நரேனும், வருண் சக்ரவர்த்தியும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால் இவர்கள் தங்களுக்கே உரித்

தான விரைவான வேகம் மற்றும் ஷார்ட்டர் லென்ந்தில் வீசினர்.


112 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி அதிரடி பட்டாளங்கள் நிறைந்தது என்பதால் விரைவாக ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற விரைவு கதியில் ஆடுகளத்தின் தன்மை யையோ, போட்டியின் சூழ்நிலையையோ கருத்தில் கொள்ளாமல் விளையாடியது. அதற்கான பலனை அந்த அணி அனுபவித்தது. மறுபுறம் குறைந்த இலக்கை கொடுத்த போதிலும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம், வெற்றியைவிட்டு விடக்கூடாது என ஒவ்வொரு பந்துக்கும் அவர்களது மெனக்கெடலை பாராட்ட வேண்டும்.


முதல் ஓவரிலேயே மார்கோ யான்சன், சுனில் நரேனின் (5) பலவீனத்தை பயன்படுத்தி ஸ்டெம்பு சிதற வெளியேற்றி சிறந்த அச்சாரம் போட்டுக்கொடுத்தார். பார்ட்லெட் வீசிய அடுத்த ஓவரில் குயிண்டன் டி காக் (2), டீப் ஸ்கொயர்லெக் திசையில் தூக்கி அடிக்க அதை சூர்யான்ஷ் ஷெட்ஜ் அற்புதமாக கணித்து நகர்ந்தபடி கேட்ச் செய்தார். எனினும் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, ரகுவன்ஷி ஜோடி சரளமாக ரன்கள் வேட்டையாடியது.


7 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 60 ரன்கள் என கொல்கத்தா அணி வலுவாக இருந்தது. இதன் பின்னர் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹல் அபாரமாக செயல்பட்டு கொல்கத்தா வசம் இருந்து வெற்றியை சிறிது சிறிதாக தங்கள் பக்கம் இழுத்து வந்தார். சாஹல் 8-வது ஓவரின் 4-வது பந்தை கூக்ளியாக வீசினார். பந்து அதிகமாக சுழலாத நிலையில் ரஹானே ஸ்வீப் ஷாட் விளை யாடினார். ஆனால் பந்து மட்டையில் படாமல் அவரது பின்காலை தாக்கியது. சாஹல் அப்பீல் செய்ய களநடுவர் எல்பிடபிள்யூ வழங்கினார். இதன் பின்னர் அட்டாக்கிங் பந்து வீச்சை கையில் எடுத்தார் சாஹல். அவரது வியூகம் ஆடுகளத்தின் தன்மைக்கும், போட்டியின் தன்மைக்கும் கைகொடுத்தது. அதேவேளையில் மேஜிக்கை நிகழ்த்தக்கூடிய எந்த பந்தையும் அவர், வீசவில்லை. எனினும் பிளைட், ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசி பேட்ஸ்மேன்களை பெரிய அளவிலான ஷாட்கள் மேற்கொள்ள தூண்டினார்.


27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து செட்டிலாகியிருந்த ரகுவன்ஷி, சாஹல் வீசிய ஷார்ட்டர் லென்ந்த் பந்தை தனது இடத்தில் இருந்து லெக் திசையில் விலகி கவர் திசையை நோக்கி விளாச முயன்றார். ஆனால் பந்து மட்டையில் சரியாக சிக்காததால் பேக்வேர்டு பாயின்ட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது பஞ்சாப் அணியின் நம்பிக்கையை அதிகரித்தது. ஏனெனில் இந்த 2 விக்கெட்களையும் சாஹல் 7 பந்துகள் இடைவெளியில் கைப்பற்றியிருந்தார்.


இதன் பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங்குவுக்கு 4 பந்துகளை ஸ்டெம்புகளுக்கு வீசினார் சாஹல். இதன் பின்னர் தனது அடுத்த ஓவரில் சாஹல் பந்தை ஸ்டெம்புக்கு நன்கு விலகியபடி வீச ரிங்கு சிங் (2) கிரீஸை விட்டு வெளியே வந்து விளையாட முயன்று ஸ்டெம்பிங்க் ஆனார். இதனிடையே வெங்கடேஷ் ஐயரை (7) எல்பிடபிள்யூ முறையில் மேக்ஸ்வெல் காலி செய்தார். 76 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்ற நிலையில் களமிறங்கிய ரமன்தீப் சிங் (0), சாஹல் தாழ்வாக வீசிய புல்டாஸை விக்கெட் கீப்பருக்கு பின்புறம் அடிக்க முயன்றார். ஆனால் பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு லெக் சிலிப் திசையில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனது.


இதன் பின்னர் களமிறங்கிய ஹர்ஷித் ராணா, மார்கோ யான்சன் வீசிய ஷார்ட் பந்தை தேர்டுமேன் திசையை நோக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து மட்டையின் கீழ் பகுதியில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது. கைவசம் 2 விக்கெட்கள் மட்டும் இருக்க ஆந்த்ரே ரஸ்ஸலும், வைபவ் அரோராவும் களத்தில் இருந்தனர்.


ரஸ்ஸலை பெரிய அளவிலான ஷாட்களை விளையாட வைத்து ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியை 14-வது ஓவரில் சாஹல் மேற்கொண்டார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த ஓவரில் ஆந்த்ரே ரஸ்ஸல் லாங் ஆன் மற்றும் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். மேலும் ஷார்ட் கவர் திசையில் ஒரு பவுண்டரியையும் விரட்டினார். இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் சேர்க்கப்பட்டதால் கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் என வெற்றிக்கு நெருக்கமாக பயணித்தது. ஆனால் அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தில் வைபவ் அரோரா (0), விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்க்லிஷிடம் பிடிகொடுத்து வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு மேலும் அதிகமானது. அடுத்த ஓவரை வீசிய மார்கோ யான்சன் முதல் பந்தை ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசினார். இதை ஆந்த்ரே ரஸ்ஸல் (17) லெக் திசையில் சிக்ஸர் விளாசுவதற்காக மட்டையை சுழற்றினார். ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்க்க பஞ்சாப் அணி வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்தது. ஏனெனில் இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு சிஎஸ்கே அணி 116 ரன்கள் என்ற இலக்கை கொடுத்து வெற்றி கண்டிருந்ததே சாதனையாக இருந்தது.


குறைந்த ரன்களே சேர்த்த போதிலும் பஞ்சாப் அணி பந்துவீச்சில் நம்பிக்கையுடன் செயல்பட்ட விதம் பாராட்டும் வகையில் இருந்தது. ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்த யுவேந்திர சாஹல் நடப்பு சீசனில் விளையாடிய முதல் 5 ஆட்டங்களில் மூன்றில் முழுமையாக 4 ஓவர்களை நிறைவு செய்தது இல்லை. ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருந்தார். இந்த ஆட்டங்களில் செய்த தவறுகளை அவர், கொல்கத்தா அணிக்கு எதிராக செய்யாமல் பார்த்துக் கொண்டார். இதுவே சாஹல் மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் கடந்த ஆட்டத்தில் சாஹலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமாகவே இருந்து வந்தது. போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாகவே சாஹல் உடற்குதியை எட்டி உள்ளார். இந்த ஆட்டம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கானதாகவும் ரசிகர்களுக்கு புதிய கோணத்தில் விருந்து படைத்ததாகவும் இருந்தது.