கீவ்:
அமெரிக்கா பலமான நாடு; ரஷ்யா தாக்குதல் குறித்து பலவீனமான பதிலளிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யப்படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின. அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்வி ரிக் பகுதியில் நடந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். 61 பேர் காயமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரட்கெட் பிரிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: விளையாட்டு மைதானம், உணவகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதல் கொடூரமானது. 8 குழந்தைகள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது: துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவின் விமர்சனம் என்பது விரும்பத்தகாத ஆச்சர்யமாக உள்ளது. எத்தகைய வலிமையான நாடு; எத்தகைய வலிமையான மக்கள் ஆனால், பலவீனமான விமர்சனம் செய்கிறது. ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தால் கூட ரஷ்யா என்ற பெயரை சொல்வதற்கே பயப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.