திருநெல்வேலி மே 13–
திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பொதிகையில் துவங்கி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், 82,000 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடிக்கு உதவி, 128 கி.மீ., தூரம் பயணித்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆறு. நான்கு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
பாபநாசத்திற்கு பரிகாரம் செய்ய வருபவர்கள், தாமிரபரணியில் குளித்துவிட்டு அணிந்திருக்கும் பழைய உடைகளை அப்படியே ஆற்றில் விடும் பழக்கம், 20 ஆண்டுகளாக உள்ளது. தாமிரபரணியில் தலையணை முதல் யானை பாலம் வரை இரு புறமும் 2 கி.மீ., துாரத்திற்கு அள்ள முடியாதளவு பழைய அழுக்கு துணிகள் தேங்கியுள்ளன.
பழைய துணிகளை அள்ளும் குத்தகைதாரர்கள் மேலோட்டமாக புது துணிகளை மட்டுமே அள்ளிச் செல்கின்றனர். பாபநாசத்தை சேர்ந்த புள்ளியியல் துறை ஓய்வு பெற்ற உதவி இயக்குனரான கிரிக்கெட் மூர்த்தி, 74, தன்னார்வலர்கள் பழைய துணிகளை அள்ளி வருகின்றனர். இம்மாதம் மட்டும் இதுவரை, 110 டன் பழைய துணிகள் அள்ளப்பட்டுள்ளன.
சமீபமாக நாக தோஷம் ஏற்பட்டவர்கள் கல்லில் பாம்பு சிலைகள் செய்தும், கற்சிலைகளை கொண்டு வந்தும் ஆற்றில் வீசுகின்றனர். இறந்தவர்களின் கண்ணாடி புகைப்படங்களை பிரேம்களோடு ஆற்றில் வீசும் விபரீதமும் நடக்கிறது. இதிலிருந்து உடையும் கண்ணாடிகள் குளிப்பவர்களின் கால்களை பதம் பார்க்கிறது.