பாம்பன் புதிய செங்குத்து தூக்குப் பாலத்தில் நடந்த சோதனையின்போது கடந்து சென்ற இந்திய கடலோர காவல்படை ரோந்துக் கப்பல்.
ராமநாதபுரம்: வரும் ஏப்.6-ம் தேதி, பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு தென்னக ரயில்வே அதிகாரிகள் ரயில் மற்றும் கப்பலை இயக்கி சோதனை நடத்தினர்.
மண்டபம் நிலப் பரப்பையும் ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு பாம்பன் பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டபத்திலிருந்தே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பழைய பாலத்துக்கு அருகிலேயே ஆசியாவில் முதன் முறையாக புதிய செங்குத்து தூக்குப் பாலம் ரூ. 545 கோடியில் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்புதிய பாலத்தை வரும் ஏப்ரல் 6-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரம் வருகை தந்து திறந்து வைக்க உள்ளார். மேலும், ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே ஆலயம் என்ற இடத்தில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்கான மேடைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. புதிய ரயில் பாலம் திறந்து வைப்பதுடன், ராமேசுவரம்-தாம்பரம்-ராமேசுவரம் பாம்பன் விரைவு ரயிலையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனையொட்டி இன்று (மார்ச் 29) தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ரயில்வே அதிகாரிகள் தூக்குப் பாலத்தை ஏற்றியும், இறக்கியும், அதன் வழியாக ரயிலையும், இந்திய கடலோர காவல்படை கப்பலையும் இயக்கி சோதனை நடத்தினர். மேலும் எத்தனை நிமிடங்களில் கப்பல் கடக்கின்றது, எத்தனை நிமிடங்களில் பாம்பன் தூக்கு பாலத்தை ரயில் கடந்து செல்கின்றது என்பது குறித்தும் சோதனை நடத்தி ஆய்வு செய்தனர்.
பிரதமர் வருகை: பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 6-ம் தேதி ராமேசுவரம் வருகிறார். முன்னதாக ஏப்.4, 5-ஆம் தேதிகளில் பிரதமர் இலங்கை செல்கிறார். ஏப்ரல் 6-ம் தேதி காலை இலங்கை கொழும்பிலிருந்து விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வந்தடையும் பிரதமர், அங்கிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார்.
அங்கிலிருந்து கார் மூலம் செல்லும் பிரதமர் காலை 10 மணிக்கு பாம்பன் இந்திராகாந்தி பாலத்திலிருந்து புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் ராமேசுவம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். அதனையடுத்து ஆலயம் பகுதியில் அமைக்கப்படும் பொதுக்கூட்ட மேடையிலருந்து பகல் 12.45 மணிக்கு ராமேசுவரம்-தாம்பரம் பாம்பன் விரைவு ரயிலை தொடங்கி வைத்து பேசுகிறார்.