பாரிஸ்:
டெலிகிராம் மெஸஞ்சரின் சிஇஓ பவெல் துரோவ், பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போன குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்ற நிலையில் பிரான்ஸில் இருந்து வெளியேறக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு தற்போது வெளியேறி உள்ளதை அந்த நாட்டின் ஊடகம் உறுதி செய்துள்ளது. அதிகாரிகளின் அனுமதியுடன் அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து மார்ச் 15-ம் தேதி அன்று புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அங்கிருந்து துபாய் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து சில வாரங்கள் வெளியில் இருக்கலாம் என துரோவ் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அனுமதி தந்துள்ளதாகவும் தகவல்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டில் விமான நிலையத்துக்கு வெளியே துரோவ் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போனது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை பிரான்ஸ் அரசு கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு அடுத்த சில நாட்களில் நிபந்தனை ஜாமீன் தரப்பட்டது. இருப்பினும் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அதற்கான தடையும் பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அரசுடன் சுமூகமாக செல்லும் வகையில் டெலிகிராமில் சில மாற்றங்களை துரோவ் செய்தார். இந்த நிலையில் தற்போது அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.