tamilnadu epaper

பூஜை

பூஜை

எங்கள் மாடி வீட்டின் பால்கனியிலிருந்து பார்த்தேன். கீழ் வீட்டிற்குள் சில ஆட்கள் போவதும் வருவதுமாய் இருந்தார்கள். என்ன ஏதென்று புரியவில்லை எனக்கு.

 

“ராணி, கீழ்வீட்ல என்ன நடக்குது? ஏதாவது விசேஷமா?” என் மனைவியிடம் கேட்டேன்.

 

“முதல்ல நீங்க பால்கனி கதவை மூடிட்டு உள்ளே வாங்க. கீழ்வீட்டுல ஏதோ துர்சக்தி நுழைஞ்சிருக்காம். அதை விரட்டுறதுக்கு பூஜை பண்றாங்களாம். அதுக்காகத்தான் நாலு மந்திரவாதிகள் வந்திருக்காங்களாம். நீங்க நம்ம வீட்டுக் கதவைத் திறந்து வெச்சிருந்தீங்கன்னா அங்கேயிருந்து வெளியேறுகிற துர்சக்தி நம்ம வீட்டுக்குள்ளே நுழைஞ்சிடும்” கொஞ்சம் பதற்றமாய்ச் சொன்னாள் ராணி.

 

“துர்சக்தியா? அப்படியென்றால் பேயா? ரெண்டு வருடம் இந்த வீட்டில் வசிக்கிறோம். அப்படி எதையும் நாம எதையும் பார்த்ததே இல்லையே. கீழ்வீட்டுல மட்டும் எப்படி ராணி?”

 

“எது எப்படி வீட்டுக்குள்ளே வருதுன்னு நம்மளால சொல்ல முடியாதுங்க. யாராவது போகக்கூடாத இடத்துக்குப் போயிட்டு வந்திருப்பாங்க. அது அவங்க பின்னாடியே வந்திருக்கும். இப்ப எல்லாம் வெளியே போய்ட்டு வீட்டுக்குள்ளே வர்றவங்க கால் கழுவிட்டு வர்றாங்களா?”

 

“சரி, துர்சக்தி வீட்டுக்குள்ளே நுழைஞ்சிடுச்சுன்னு எப்படி தெரிஞ்சுதாம்?”

 

“நைட் ஒரு மணியில இருந்து மூணு மணி வரைக்கும் அப்பப்ப சலங்கை சத்தம் கேட்குதாம். ஒரு வாரமாத்தான் அவங்க கவனிச்சுருக்காங்க” -ராணி சொன்னாள்.

 

ஒரு வாரத்திற்கு முன்பு எங்கள் ஒரு வயது குழந்தைக்காக கிலுகிலுப்பை வாங்கி வந்ததும், குழந்தை இரவு உறங்காமல் விழித்துக் கொண்டால் உறங்க வைக்க கிலுகிலுப்பையை நான் குலுக்கி உறங்க வைத்ததும் என் நினைவுக்கு வர…

 

“ஓஹோ... அவங்க பூஜை பண்ணட்டும். இனி துர்சக்தி தொந்தரவு இருக்காது” ராணியிடம் சொன்ன நான், கிலுகிலுப்பையைப் பரணில் தூக்கிப் போட்டேன்.