தமிழ் நாடு இ பேப்பரின் எழுச்சி மிக்க வருகை படைப்பாள உள்ளங்களுக்கு
என்றென்றும் புத்துணர்வு ஊக்கம்.
வாசகப் பெருமக்களுக்கு வற்றாத நல் விருந்து.
ஆசிரியர் குழுவினர்க்கு ஆனந்த வாழ்த்துகள்!
போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும்.---
மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.
இன்றைய சூழலில் போர் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று.
இரு வேறு கருத்துகள் கிடையாது. காரணம்
மனித அநாகரீகத்தின்
உச்சம் போர். இது ரஷ்யாவுக்கும் பொருந்தும்.இஸ்ரேலுக்கும் பொருந்தும்.
இந்தியாவுக்கும் பொருந்தும்.
இதை வலியுறுத்தும் விதமாக 'பிரச்னைக்கு
சண்டை தீர்வல்ல '
என்று ஐநா இரு நாடுகளிடமும் வலியுறுத்துவது வரவேற்கத் தக்கது.
எது எப்படியோ,
இதற்கெல்லாம் தீர்வு...
விரலசைவில் உலகம் சுருங்கி விட்ட இந்த அதிநவீன தொழில் நுட்ப காலத்தில்
ஓருலக ஆட்சியை இங்கே மலர வைப்பது தான். உலகத் தலைவர்கள் ஈகோவை
புறந்தள்ளி விட்டு இந்த விஷயத்தில் ஒன்றிணைந்தால்
ஒரே நாளில் மாபெரும் மாற்றத்தை உண்டு பண்ணி போரில்லா உலகுக்கு ஒளி ஏற்றலாம்.
மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும் என்று வணிகர் சங்க கோரிக்கை மாநாட்டில்
முதல்வர் அறிவிப்பு
நிச்சயம் வியாபார பெருமக்களுக்கு ஆனந்தம். இன்னும் சில சலுகைகளும் கிட்டியிருப்பது களிப்பைக் கூட்டும்.
பயங்கர வாதத்திற்கு எதிரான நடவடிக்கை அப்பாவி காஷ்மீரிகளுக்கு துன்புறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கூறுவதில் அரசியல் ஆட்டமும் உள்ளடக்கம்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் மூளையைப் பாதிக்கும் பக்கங்கள் மிகவும் பயனுள்ளவை.
மூளை யுள்ளவர்கள் பயன் படுத்திக் கொள்வார்கள்.
சந்தேகமில்லை.
இலக்கியப் பக்கங்கள் அனைத்துமே அக்மார்க் தரம். அற்புத சுவை ஆனந்தம் அள்ளுகிறது.
சினிமா செய்திகள் அக்னி அனலுக்கு ஜில் ஜில் சொர்க்கம்.
கவிதைகள் அனைத்தும் எளிமை ஓட்டத்தில் இதயம் நனைக்கின்றன.
வாசகர் கடிதங்களின் அணிவகுப்பு வித்யாச
வாசிப்பனுபவம்.
வரிந்து கட்டிக் கொண்டு விரிந்த உள்ளத்தில் வளமாய் விமர்சிப்பதும் ஒரு கலை தானே! பாராட்டி
பரவசம் அடையவும் ஒரு வகை பக்குவம் கை கூட வேண்டும்!
சுவாரஸ்யம் சிறிதளவும் குன்றாமல்
சுவையாகவும் சூடாகவும் படைப்புகளை -- பக்கங்களை நவமாக்கும் நயமாக்கும் வித்தகம் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினர்க்கு அற்புதமாய் வசப்பட்டிருக்கிறது.
உண்மையைத் திரும்பத் திரும்ப சொல்லும் போது
பேருண்மை ஆகி விடும் அன்றோ?
மீண்டும் மீண்டும்
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்