tamilnadu epaper

பூவும், பொட்டும்

பூவும், பொட்டும்

விமலா எல்லா வீட்டு வேலைகளையும் முடித்து மாமியாருக்கு செய்யும் கடமைகளையும் செய்து, சாப்பாடு தண்ணீர் எல்லாம் அருகில் எடுத்து வைத்து அவள் கிளம்ப ஆயத்தமானாள் . தலை சீவி போட்டு வைத்து பூ வைக்கும் போதே மாமியாரின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது .

 

தினமும் கிளம்பும்போதெல்லாம் இந்த அர்ச்சனை தான் எனக்கு,இது ஒன்னும் புதுசி ல்ல பதில் பேசாமல் வெளியே கதவை தாழிட்டு பூட்டினேன். வண்டி ஸ்டார்ட் செய்து , சிட்டாக பறந்தேன்.

 

நாளை ஆடி வெள்ளி என்பதால் காலையிலிருந்து மாலை வரை சரியான கூட்டமாக இருக்கும்.பக்கத்து கடையில் ஒரு வடையும் டீயும் வாங்கி வர சொன்னேன் கடையில் வேலை பார்க்கும் பையனிடம், சாப்பிட கூட நேரம் இருக்குமா என்று தெரியவில்லை, டீ குடிச்சா மூணு மணி வரைக்கும் தாங்கும்.

 

பூ விலை தாறுமாறாக இருந்தாலும் கூட்டம் குறையவில்லை வியாபாரம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.

 

பூ மார்க்கெட்டின் எல்லா பூக்களின் நறுமணத்தையும், மக்களின் சத்தத்தையும் மீறி அக்கா என்று குரல் என்னை திரும்பிப் பார்க்கச் செய்தது. பக்கத்து வீட்டு கமலதான் நின்றிருந்தாள்.

 

என்னக்கா பூ மார்க்கெட்டே வர மாட்டீங்க இன்னைக்கு என்ன கடைக்கு வந்துட்டீங்க,

 

ஆடி வெள்ளியில் சுமங்கலிகளுக்கு வெத்தலை மஞ்சள் குங்குமம் எல்லாம் வச்சு கொடுக்கும்போது பூவும் வச்சு கொடுத்தா நல்லா இருக்கும்னு மொத்தமா வாங்குவதற்காக இங்க வந்தேன்.

 

என்ன பூ வேணும்

 

சாமிக்கு அரளிப்பூ ஒரு பாக்கெட்டும், கால் கிலோ மல்லி பூவும், கால் கிலோ செவ்வந்தியும் கொடுக்கா ,

 

காசு கொடுத்து விட்டு கமலா அக்கா போகாமல் அங்கேயே நின்றிருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

என்ன , அக்கா வேற ஏதாவது வேணுமா?

 

இல்ல, உங்கிட்ட ஒன்னு பேசணும்

 

சரி அங்க நிழலில் நில்லுங்க வரேன் .

 

தினமும் மாமியா கிழவி உன்னை வைஞ்சுக்கிட்டே இருக்கே ,நீ ஏதாவது பதில் சொல்ல வேண்டியது தானே , நீ வந்ததுக்கப்புறம் ரொம்ப நேரம் கத்திக்கிட்டே இருந்தது .

 

என்னத்த அக்கா சொல்றது அவங்க அந்த காலத்து மனுசி அவங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாது, கட்டுன மனசன் திடீர்னு ஆக்சிடண்டுல என்னையும், ரெண்டு பிள்ளைகளை விட்டுட்டு போய் சேர்ந்துட்டாரு சிவனேன்னு,

 

இந்த பூக்கடைய நம்பி தான் என் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு, இங்க வந்து நான் பூவும் பொட்டும் இல்லாம அமங்கலியா உக்காந்து இருந்தா ,பூ வியாபாரம் எப்படிக்கா நடக்கும் .

 

கிழவி படுத்த படுக்கையாகி அஞ்சு வருஷம் ஆச்சு ,எதிர்வீட்டு அக்காவே காலைல வாசல் பெருக்க எனக்கு முன்னாடி வர மாட்டேங்குது மனுசங்க மனசு மாறாத வரைக்கும் எதையும் மாத்த முடியாது தப்பு செய்வதற்கு பூவும் ,பொட்டுமா முக்கியம் உடம்பு மனசும் ரணமா மரத்து போய்கிடக்கு,

பிள்ளைகள படிக்க வைச்சு கரை சேர்க்கறதுக்கு நான் படுற, பாடு எனக்கு தான் தெரியும் .

 

சரிக்கா இதைக் கேட்கவா என்னை கூப்பிட்ட கடையில கூட்டம் நிறைய வந்துருச்சுக்கா, நான் போறேன் .

 

இயற்கை தான் எத்தனை அற்புதமானது, விமலா திரும்பி நடக்கையில் அவள் வைத்த பூவிலும் மனம் வீசத்தான் செய்தது .

 

 

சங்கரி முத்தரசு, கோவை.