tamilnadu epaper

விசித்திர ஆசை

விசித்திர ஆசை


அந்தப் பெரியவர் பெரும் செல்வந்தர். எழுபத்தைந்து வயதிருக்கும். தீய பழக்க வழக்கங்கள் ஏதும் இல்லாதவர். இரக்க குணம் படைத்தவர்.


அநாதை ஆசிரமங்கள், மாற்றுத் திறனாளிகள் இல்லம், தொட்டில் குழந்தை, அபலைகள் மறுவாழ்வு, ஏழைகள் கல்வி போன்றவற்றிற்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டவர்.


அவர் ஒரு முறை கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டார். காலில் பலத்த அடி. அவரால் எழ முடியவில்லை. கதவை உட்புறமாய் தாளிட்டிருந்தார். 


சப்தம் கேட்டு மகன் வந்து கதவின் தாழ்ப்பாளை உடைத்துத் திறந்தார். அருகில் இருந்த நர்ஸிங் ஹோமில், பரிசோதனைகள் செய்து டிரிப்ஸ் ஏற்றி, வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.


அவருக்கு ஏற்கனவே புரொஸ்டேட் சுரப்பியில் வீக்கம். அதனால் அவசரமாய் சிறு நீர் கழிக்கும் உந்துதல் உண்டு என கண்டு பிடித்து சிகிச்சை அளித்தனர்.


தன் அந்திம காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்து மாநில, மத்திய நிவாரண

நிதிகளுக்கு இயன்ற உதவிகள் செய்தார். 


ஐம்பது லட்சம் ரூபாயில் ஒரு அறக்கட்டளை உருவாக்கி, அதில் வரும் வட்டித் தொகை இயலாதவர்களுக்கு சேரும்படி நாணயமான முக்கியஸ்தர்களை நியமித்தார்.


அவர் மகனை அழைத்து தான் இறந்ததும், கடைசியாக தன் முகத்தைப் பார்க்க வரும் நண்பர்களை ஒரு ரிஜிஸ்டரில் பெயர், செல் எண் மற்றும் விலாசம் எழுதும்படி கேட்டுக் கொண்டார்.


அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் செக் அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார்...அதற்கெல்லாம் தனியாக பணம் வங்கியில் ஒதுக்கி இருப்பதாய் கூறினார். சேவிங்ஸ் அக்கவுண்டில் மகனை நாமினியாய் நியமித்திருந்தார். 


தகப்பனாரின் வினோத விருப்பங்கள் மகனைத் திக்கு முக்காட வைத்தது.


அவர் ஆசைப்படியே ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாய் நிறைவேற்றினார். 


ஒரே ஒரு குறை என்னவெனில், யார் யாரெல்லாம் தன்னைப் பார்க்க வருவார்கள் என தீர்க்கமாய் நம்பினாரோ, அவர்களில் ஓரிருவரைத் பலர் வரவே இல்லை.



பி. திலகவதி,

சென்னை.