பட்டுக்கோட்டைராஜா இன்று என் நண்பனின் கவிதை நூல் வெளியீட்டுவிழா. இதற்கெல்லாம் கூட்டம் வராது என்று அலட்சியமாய் வந்த என்னை மண்டபத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் மிரளவைத்து விட்டது.
உட்கார இடம் கிடைக்கவில்லை. ஆண்கள்-பெண்கள் என்று மண்டபம் நிரம்பி வழிந்தது. வந்திருந்த அனைவருக்கும் உள்ளே நுழையும் போதே டீ-வடை-காபி வழங்கப் பட்டது. உள்ளே குளிரூட்டப் பட்ட கூடம். அவனுக்கு இது முதல் புத்தகம். இவ்வளவு பிரமாண்டமான வெளியீட்டுவிழா என்றால் செலவை எப்படிச் சமாளிப்பான்?அவன் வசதியானவனும் இல்லை.
எனக்குள் கேள்வி வந்தது. ஒருவேளை கவிதைகள் நன்றாக இருக்குமோ? கையெழுத்துப் பிரதியாய் இருந்தபோது நான்கைந்து கவிதைகளைப் படிக்கக் கொடுத்தான். எல்லாம் காதல் புலம்பல்களாய் இருந்தன. அவன் `கலாவதி’ என்ற ஒருத்தியைக் காதலித்தான். அவள் இவன் காதலைக் காலாவதியாக்கிவிட்டு வேறு ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். அவளை எண்ணி எழுதியிருப்பானோ? நான் எந்தக் குறையும் சொல்லாமல், ``நல்லாயிருக்குடா!” என்றேன். சில பிழைத் திருத்தங்கள் மட்டும் சொன்னேன்.
மேடையில் இவன் புத்தகத்தை வெளியிட்டவர்,``இந்தத் தம்பி இத்தனை நாள் எங்கிருந்தார் என்று தெரியவில்லை…இவரைக் `குடத்திலிட்ட விளக்கு’ என்றால் மிகையில்லை-அவ்வளவு அருமையான எழுத்து…சினிமா தயாரிப்பாளர்கள் இவர் வீட்டுக் கதவைத் தட்டும்நாள் தொலைவில் இல்லை!”என்று தொடங்கி என் நண்பனைப் பாராட்டு மழையில் நனைத்தார்.
பிறகு புத்தகம் விற்பனைக்கு வந்தது. வந்திருந்த அனைவருமே ஒரு பிரதி வாங்கினார்கள். சிலர் இரண்டு. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நானும் புத்தகம் போட்டு விற்க முடியாமல் என் மனைவியிடம் அன்றாடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன். இவனது ஐநூறு பிரதிகளும் இன்றே விற்றுவிடும் போல் இருந்தது. எல்லோரும் ஒவ்வொரு பிரதி வாங்கும்போது நான் மட்டும் வாங்காதிருந்தால் குற்றமாகிவிடும் என்ற பயத்தில் நானும் ஒன்று வாங்கினேன்.என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அழுக்குவேட்டிப் பெரியவரும் ஒரு பிரதி வாங்கினார்.
``உங்களுக்குக் கவிதைகள் பிடிக்குமா?” என்று அவரைக் கேட்டேன்.
``கவிதைகள் பிடிக்கும்தான்…ஆனால் இதிலிருப்பவை கவிதைகளே இல்லை!”என்றார்.
``அப்புறம் ஏன் வாங்குனீங்க?”
``அவரே பணம் கொடுத்து வாங்கச் சொல்லும்போது நான் எப்படி வாங்காமல் இருப்பேன்…? அவரோட புனைப் பெயரைப் பார்த்தீங்களா?”-என்று சிரித்தபடியே கேட்டார்.
நான் அப்போதுதான் பார்த்தேன்.``பைரவன்” என்று போட்டிருந்தது. பொருத்தமான பெயர்! ஃ ஃ ஃ ஃ
முகவரி; பி.எல்.ராஜகோபாலன்,19-சவுக்கண்டித்தெரு, பட்டுக்கோட்டை-614601.