புதுடெல்லி,மார்ச் 28–
பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் மற்றும் பெண்கள் , குழந்தைகளுக்கு உடை மாற்றும் அறைகளை அமைக்குமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ரயில்வே வாரியம் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள விமான நிலையங்களில் முறையே 164 மற்றும் 148 உணவு அறைகள் / உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மிஷன் சக்தி இயக்கத்தின் கீழ் 'பல்னா' அம்சத்தை செயல்படுத்துகிறது. இதன் கீழ் பகல்நேர பராமரிப்பு வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆகியவை முக்கிய நோக்கங்களாகும். மாநிலங்களவையில் இந்த தகவலை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்தார்.