ஆண்டிபட்டி:
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வார்கள். இதனை முன்னிட்டு வைகை அணையில் 4 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறக்கப்பட்டு மதுரைக்கு சென்றடையும் வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அணை அதிகாரிகள் கூறுகையில், மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து மே 8-ந்தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 55.76 அடி நீர் மட்டம் உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2842 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. அணையில் 1585 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.80 அடியாக உள்ளது. 39 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 99.83 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 39.20 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. போடியில் மட்டும் 21.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.