" />
தியாகு தன் மச்சினன் கோபியை கன்னத்தில் அறைந்ததை தெருவே பார்த்தது.
"மாப்ள என்னை அடிங்க... பரவாயில்லை!... ஆனா நீங்களே நேரில் வந்து என் தங்கச்சியை திருப்பி கூட்டிட்டு வந்திடுங்க!".
"நான்தான் வரச் சொல்லிட்டேனே?" திமிராய்ச் சொன்னான் தியாகு.
"நீங்க வந்து கூப்பிட்டாத்தான் வருவேன்!னு பிடிவாதமா நிக்கிறா!" கெஞ்சலாய்ச் சொன்னான் கோபி.
"ஓ... அவளுக்கு அவ்வளவு திமிராயிடுச்சா?".
"மாப்ள... கெஞ்சி கேட்கிறேன் இந்த ஒரு தடவை நீங்களே வந்து அவளைக் கூட்டிட்டு வாங்க!" குனிந்து தியாகுவின் காலை தொட்டான் கோபி..
"ச்சீய்.. போடா அந்தப்பக்கம்" கோபியின் இரு தோள்களையும் பற்றி ஒரே தள்ளாய்த் தள்ளினான் தியாகு.
மல்லாக்க விழுந்த கோபியை பார்த்து மக்கள் பரிதாப பட்டனர்.
நீண்ட நேரம் தன் தியாகுவுடன் மன்றாடி விட்டு தோல்வியுடன் நகர்ந்தான் கோபி.
அவன் சென்ற பத்தாவது நிமிடம் தியாகுவை தேடி வந்தார் அந்த பெரியவர்.
"ஏன்பா தியாகு... கோபி யாரு?.. உன் மச்சினன்தானே? அவனைப் போய் இப்படி எல்லோர் முன்னாடி அடிக்கறியே... இது நல்லாவா இருக்கு?.
"வந்துட்டாருய்யா வக்காலத்து வரதன்".
"ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்... இந்த கோபியோட பொண்டாட்டி எப்படி செத்தாள்?ன்னு உனக்கு தெரியுமா?.
"தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிகிட்டா"என்றான் தியாகு அலட்சியமாய்.
"அதுதான் இல்லை உன் மச்சினன் கோபிதான் அடிச்சுத் தூக்கித் தொங்க விட்டுட்டான்."
அதிர்ந்து போன தியாகு, "என்னங்க சொல்றீங்க?" கேட்டான்.
"அதுவும் ஏன் தெரியுமா?... அவன் தங்கச்சியை அவள் ஏதோ அசிங்கமாய்ப் பேசிட்டாளாம்!... அதுக்காக பொண்டாட்டின்னு கூடப் பார்க்காம போட்டுத் தள்ளிட்டான்".
தியாகு "திரு... திரு!"வென்று விழிக்க.
"தங்கச்சியைத் திட்டின பொண்டாட்டியையே கொன்னவன்.. தங்கச்சியை அடிச்ச உன்னை எப்போ...எங்கே... என்ன... செய்யப் போறானோ? தெரியல!... எதுக்கும் ஜாக்கிரதையா இரு,".
சொல்லியபடியே அந்தப் பெரியவர் நகர, அடுத்து பஸ்ஸிலேயே மனைவியின் ஊரை நோக்கிப் புறப்பட்டான் தியாகு, அவளை திரும்பக் கூட்டி வர.
(முற்றும்)
-----------
முகில் தினகரன், கோவை