புதுடெல்லி, மார்ச் 31
திருப்பூரில் செயல்படும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணியை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.
யோகா தினம், மாணவர்களுக்கு அறிவுரை, தண்ணீர் சேமிப்பு பெருமைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினர்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 120-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை காலம் துவங்க உள்ள நிலையில் தன்னார்வ சேவைகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பள்ளிகள், சேவை அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் விடுமுறையை தங்களுடைய திறனை மெருகேற்றி கொள்வதற்கும், புதிய பொழுதுபோக்கை கற்று கொள்வதற்கும் மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில்
நீரை சேமியுங்கள்
கோடை காலத்தில் நீரை சேமிக்க வேண்டும். கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில், 1,100 கோடி கன மீட்டர் அளவுக்கு தண்ணீர் சேமிப்பு நடந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள், குளங்கள் மற்றும் பிற தண்ணீர் தேக்க கட்டமைப்புகளின் வழியே இது சாத்தியப்பட்டு உள்ளது.
1,100 கோடி கன மீட்டர் அளவுக்கு தண்ணீர் என்றால் எவ்வளவு? என நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்பட்டு போவீர்கள். கோவிந்த் சாகர் ஏரியில் 900 முதல் 1,000 கன மீட்டர் அளவுக்கு மேல் நீர் தேக்க முடியாது என்றால் பார்த்து கொள்ளுங்கள் என கூறி தண்ணீர் சேமிப்பு பற்றி அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று யோகா தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
யோகா செய்யுங்கள்
உலகம் முழுவதும் யோகா, பாரம்பரிய மருத்துவம் குறித்து ஆர்வம் அதிகரித்து வருகிறது. யோகா தினத்திற்கு இன்னும் 100 நாட்களுக்கு குறைவாகவே இருக்கிறது. உங்களுடைய வாழ்வில் யோகாவை நீங்கள் மேற்கொள்ளவில்லை என்றால் உடனே செய்யுங்கள். இன்னும் காலம் கடந்து விடவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பு 2015ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தற்போது இந்த தினம் ஆனது, யோகாவின் பிரம்மாண்ட திருவிழாவாக உருப்பெற்று விட்டது.
ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்பதே 2025-ம் ஆண்டுக்கான யோகா தின கருப்பொருளாக உள்ளது. யோகாவின் வழியே, ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
உலகில் அதிக ஜவுளிக் கழிவுகள் உருவாகும் 3வது நாடு இந்தியா. ஜவுளி கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இந்தியா பிரபலம் அடைந்து வருகிறது. சிறந்த முயற்சியாக பல இந்திய ஸ்டார்ட் அப்கள் ஜவுளி மறுசுழற்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஜவுளி கழிவுகளில் 1%க்கும் குறைவாகவே புதிய துணிகளாக மறு சுழற்சி செய்யப்படுகிறது. பழைய துணிகள், காலணிகள் மறு உபயோகத்திற்கு மாற்றி, அவசியமுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. பானிபட், ஹரியானா போன்ற நகரங்கள் ஜவுளி கழிவுகளுக்கான தீர்வுகளில் முன்னிலை வகிக்கிறது. பெங்களூரு நவீன தொழில்நுட்ப தீர்வுகளுடன் செயல்பட்டு, அதிகளவிலான ஜவுளி கழிவுகளை திரட்டி மறுசுழற்சி செய்கிறது.
திருப்பூர் ஆலைகளுக்கு
பாராட்டு
திருப்பூரில் சாய ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கொண்டு சென்று, மறுசுழற்சி செய்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. கழிவு நீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் உப்பு முழுவதும் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
திருப்பூரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மூலம் ஜவுளி கழிவுகளை சுத்தமாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது.
நமது பண்டிகைகள் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையைக் காட்டுகின்றன. ஈத், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.