வான்மகள் கருணை யாலே
வரமென கொட்டித் தீர்க்கும்
தேன்சுவை அளித்தே நல்ல
தேறுதல் புவியும் ஏற்கும்
ஊன்நலம் பேணத் தானே
உந்துதல் ஆகு மன்றோ
ஏன்வளம் கெடுக்கின் றோம்நாம்
எண்ணியே மாற்றம் சேர்ப்போம்
மரங்களைச் செழிக்க செய்யும்
மானுடம் வாழச் செய்யும்
உரங்களை உழவன் தூவ
உழுதலை உயிர்க்க செய்யும்
கரமென நமக்கு வாய்த்து
காரியம் செய்ய வைக்கும்
தரமுடன் மழைநீர் பெய்ய
தருக்களை வளர்ப்போம் மண்ணில்
மழையினைக் காத்தால் நாமும்
மழையுமே நம்மைக் காக்கும்
மழையதன் சுழற்சி கற்க
மாண்புறும் இயற்கை மாட்சி
மழையினால் உழவும் ஏறும்
மாற்றமும் உழவர் காண்பார்
மழையுமே கடவுள் தூது
மறந்திட வருமே தீது!
-கவிஞர் மு.வா.பாலாஜி
ஓசூர்