கோயிலுக்கு 6 மணிக்கெல்லாம் வந்துவிட்டான் விவேக். அவன் வந்தபிறகு பகல்பணி பார்த்த ராமு கிளம்பினான். வரேன் விவேக். நாளைக்குப் பார்க்கலாம்.
சரிங்கண்ணே.. என்று அவனை வழியனுப்பி வைத்தான்.
பேருந்துகள் புழங்கும் மெயின் சாலையில்தான் கோயில் இருந்தது. அந்தக் கோயிலில்தான் பகலில் ராமுவும் இரவில் விவேக்கும் மெய்க்காவல் பணி பார்க்கிறார்கள்.
ராமுவிற்கு நிரந்தரப்பணி.
விவேக்கிற்குத் தற்காலிகப் பணி. விவேக்கின் அப்பா கோயிலில்தான் நிரந்தரப் பணி பார்த்தார். எதிர்பாரா விபத்தில் கால்கள் முறிந்து வீட்டில் இருக்கிறார். கீழே விழுந்ததில் தலையில் வேறு அடிபட்டு மூளையில் சில கோளாறுகள் வந்து பணியைக் கவனிக்கமுடியாமல் அவருக்குப் பதிலாக அவருடைய மகன் விவேக் வந்து மெய்க்காவல் பார்க்கிறான். பத்தாம் வகுப்பில் 475 மதிப்பெண்கள். மேல்நிலைப் பள்ளியில் 1100 மதிப்பெண்கள் பெற்று பிஇ முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று வேலைக்கு முயற்சி செய்யும் நேரத்தில் இப்படி ஆகிவிட்டது. அப்பாவிற்குக் குணமாகும்வரை பார்த்தே ஆகவேண்டும். இப்படி வேலை போட்டுக் கொடுத்ததே நல்ல மனம்தான்.
கோயில் வாசலில் நின்று யோசித்துக்கொண்டிருந்தவன் அருகில் வந்து நின்றான் அவன் நண்பன் முரளி.
வாடா முரளி என்றான்.
என்னடா எப்படி இருக்கே? என்றான் முரளி.
நல்லா இருக்கேன்.. மெய்க்காவல் பணி. இறைவனைப் பார்த்தபடி பொழுது போகிறது.
உனக்காச்சும் பரவாயில்லடா.. எனக்குத்தான்.. என்று இழுத்தான்.
என்னாச்சுடா?
எங்கப்பா பால் வியாபாரம் பாரு வேலை கிடைக்கறவரைக்கும்னு சொன்னதால பார்த்தேன்.. அதுல காசு பார்த்ததும் தீவிரமாப் பார்த்ததில் வருஷம் ஓடிப்போச்சுடா.. இப்போ 27 வயசாயிடிச்சு.. நம்ப செட்டு எல்லலாம் ஐடி பீல்டுலே நிறைய காசு பாக்கறாங்க.. நாந்தான்.. விட்டுட்டேன்.. இனிமே எங்கடா வேலைக்குப் போறதுன்னு ஒரே கவலையா இருக்குடா.. என் வாழ்க்கைப் போயிடிச்சுடா.. பால் வியாபாரத்தால…
விவேக் சிரித்தான்.
ஏண்டா சிரிக்கறே? என்னப் பார்த்தா உனக்கு சிரிப்பா வருதா?
இல்லடா முரளி நான் என்ன நினைக்சுக்கிட்டேன்.. எனக்கு மட்டும் என்ன சின்ன வயசா? உன் வயசுதான்.. உனக்காச்சும் மாட்டுப்பண்ணை இருக்கு.. வியாபாரம் பார்த்துக் காசு பார்த்துட்டே.. எனக்கு எங்கப்பாவுக்காகப் பார்க்க வந்துருக்கேன்.. இதுல ரொம்ப சம்பளம் கிடையாது.. வாங்குற சம்பளத்துல பாதி அப்பாவோட மாத்திரைக்கே போயிடுது.. அம்மாதான் சமாளிக்கிறா. வீட்டு வேலைங்க பார்த்து.. நான் எப்படியாச்சும் ஒரு நல்ல வேலைக்குப் போயேயாகணும்.. எங்கப்பா சரியாக இன்னும் இரண்டு வருஷம் ஆகும்னு டாக்டர் சொல்லிட்டாரு.. அப்போ எனக்கு 29 வயசு ஆயிடும்.. ஆனா நான் கவலைப்படாமத்தான் இருக்கேன் என்றான்.
என்னடா இப்படிச் சொல்றே? கவலை இல்லேங்கறே?
ஆமாண்டா.. இந்த மெய்க்காவல் பணி எனக்குப் புடிச்சிருக்கு.. எல்லாப் புத்தகத்தையும் கோயில்ல கொண்டு வந்து வச்சிருக்கேன்.. இரவு பன்னிரண்டு மணிவரைக்கும் படிப்பேன்.. இதே சன்னதியிலதான்.. எப்படியும் அரசு வேலை வாங்கிடுவேன் பரிட்சையில பாஸ்பண்ணி.. அதனாலதான் இரவுப்பணி கேட்டு வாங்கினேன்.. படிப்பு.. அப்புறம் வேலை.. அப்புறம் கல்யாணம் உடனே குழந்தைன்னு முப்பது வயசுக்கள்ள எல்லாத்தையும் முடிக்கணுங்கறது ஒரு பார்முலா வச்சிருக்காங்க.. அது எல்லாருக்கும் பொருந்தாது.. முப்பது வயசு தாண்டுனாலும்.. நாம ஜெயிச்சுட்டா நம்பள நம்புறவங்க வருவாங்க.. வயசு காரணம் இல்லே.. மனசுதான் காரணம்.. படிடா ஜெயிக்கலாம் ரெண்டு பேரும் சேர்ந்து.. இந்த சிவனும் பார்த்துக்குவாரு நம்பள என்றான் விவேக்.
நன்றி நண்பா என்று அவனைக் கட்டிக்கொண்டான் முரளி.
ஹரணி, தஞ்சாவூர்.