கோவை:
தென்மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 13 முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களை நேரடியாக இணைக்கும் வகையில் ரயில் சேவை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. பேருந்துகள் மூலமே மக்கள் சென்று வந்த நிலையில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இதன் தொடர்ச்சியாக கடந்த 2022-ம் ஆண்டில் கோவை வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
வாராந்திர சிறப்பு ரயில் சேவை பயண திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. அதன்பேரில் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06030) ஞாயிற்றுக்கிழமை தோறும், திருநெல்வேலியிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடையும்.
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06029) திங்கட்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த வாராந்திர சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு கோவை வழியாக போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடயம், அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, சேரன்மாதேவி என 22 ரயில் நிலையங்களில் நின்று சென்று வந்தது.
வாராந்திர சிறப்பு ரயில் சேவையை கடந்த 2024 டிசம்பர் முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனிடையே ரயில் சேவை நீட்டித்து அறிவிக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் திடீரென ரயில் சேவை நிறுத்தப்பட்டது.இதனிடையே தெற்கு ரயில்வே நிர்வாகம் மீண்டும் ரயில் சேவையை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் ஏப்.13 முதல் இயக்கப்பட உள்ளது. வரும் மே 4-ம் தேதி வரை மாதம் 4 நடைகள் இயக்கப்படும். அதேபோல மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி ரயில் ஏப்.14 முதல் இயக்கப்பட உள்ளது. மே 6-ம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.