tamilnadu epaper

ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் 15 பேருக்கு தொடர்பு: கர்நாடக அரசு தகவல்

ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் 15 பேருக்கு தொடர்பு: கர்நாடக அரசு தகவல்

நடிகை ரன்யா ராவ் மீதான தங்க கடத்தல் வழக்கில் 15 பேருக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக அரசு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக‌ கடந்த 3-ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.


ரன்யா ராவின் தங்க கடத்தலுக்கு அவரது வளர்ப்பு தந்தை ராமசந்திர ராவ் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து கர்நாடக குற்றப்பிரிவு போலீஸார், ராமசந்திர ராவ், ரன்யா ராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதன் இறுதி அறிக்கையை கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.


பின்னர் கவுரவ் குப்தா கூறும்போது, ''கர்நாடக போலீஸார் நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். ரன்யா ராவ் தங்க கடத்தலுக்காக அடிக்கடி துபாய் சென்று வந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த வழக்கில் அவருடன் 15 பேர் தொடர்பு வைத்திருக்கலாம் என எங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இறுதி விசாரணை அறிக்கையின் விவரங்களை முழுமையாக வெளியிட இயலாது'' என்றார்.