tamilnadu epaper

வசியக்காரி

வசியக்காரி


தோழி ஈஸ்வரியுடன் சாவித்திரி அந்த சாமியாரைப் பார்க்க வந்திருந்தாள். வந்த இடத்தில் அவளது பெரியப்பா மகனும், போலீஸ்காரனுமான தண்டபாணியை மப்டியில் பார்த்ததும் பதட்டமானாள்.


  "சாவித்திரி... நீ எப்படி இங்கே?" தண்டபாணி கேட்டான்.


  சாவித்திரி பதில் சொல்ல முடியாமல் 'திரு... திரு'வென்று விழிக்க, அவளுடன் இருந்த தோழி ஈஸ்வரி பதில் சொன்னாள்.


   "ஒண்ணுமில்லை அவ புருஷன் இவகிட்ட ஒழுங்கா நடந்துக்கறதில்லையாம்!.. அடிக்கடி சண்டை போடறானாம்... திட்டுறானாம்... சமயத்துல அடிக்க கூடச் செய்யறானாம்!... அதான் அவனை வசியம் பண்ண இந்த சாமியார் கிட்ட வசிய மருந்து வாங்க வந்தோம்"


விழிகளை பெரிதாக்கிக் கொண்டு தண்டபாணி சாவித்திரியைப் பார்க்க, அவள் "ஆமாம் அண்ணா.... உண்மையைச் சொல்லணும்னா... அவருக்கு என் மேல் துளிக்கூட அன்போ... பாசமோ... இல்லை!... என்னை கொஞ்ச வேணாம்... குறைந்தபட்சம் சிரித்த முகத்தோட பேசலாமல்லவா?... எப்பப் பார்த்தாலும் "கடு... கடு"ன்னு இறுகிய முகத்தோடவே இருக்கிறார்!" என்றாள்.


சாவித்திரியை நேருக்கு நேர் பார்த்த தண்டபாணி, "சாவித்திரி... அதோ அந்த சர்பத் கடைப் பக்கம் நிக்கறது யாரு தெரியுமா? போலீஸ்காரர்... அதே மாதிரி இங்கே எல்லா இடத்திலும் போலீஸ்காரங்க மப்டில மறைஞ்சிருக்காங்க.... எதுக்குத் தெரியுமா?... இந்தச் சாமியாரைக் கையும் களவுமாய்ப் பிடிக்க" என்றான்.


  "ஏன்?... எதுக்கு?" ஈஸ்வரி கேட்க,


  "இவன் ஒரு ஃபிராடு சாமியார்!... லேகியம்... குளிகை... சூரணம்...னு பல வகை வஸ்துக்களை போதை மருந்துகளோடு மிக்ஸ் பண்ணி... தன்னைத் தேடி வர்றவங்களுக்கு அதிக விலைக்குக் கொடுத்திட்டிருக்கிறான்"


  "ஐயையோ" என்றாள் சாவித்திரி இரு கன்னங்களிலும் கையை வைத்துக் கொண்டு.


  "அது மட்டும் இல்லை... நீ வாங்க வந்திருக்கியே வசிய மருந்து... இவன் கிட்ட அதை வாங்கிச் சாப்பிட்ட பல கணவன்மார்கள் ஆஸ்பத்திரில கிட்னி ஃபெயிலியர் ஆகி... சாகக் கிடக்கிறாங்க!... அந்த ஆஸ்பத்திரியில் இருந்தவங்க குடுத்த கம்ப்ளைன்ட்டை வெச்சு விசாரிச்சிட்டுத்தான்... இவனைப் பிடிக்க நாங்கள் மப்டில வந்திருக்கோம்"


   சாவித்திரி "பொசுக்"கென்று அழுது விட.


   "த பாரு சாவித்திரி... புருஷன் கிட்ட நீயே அன்பா.... அனுசரணையா... அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டேன்னா வசிய மருந்தெல்லாம் எதுக்கு?... அப்புறம் இன்னொரு விஷயம் ...உன் புருஷன் ராசையா ஒரு பெரிய பண்ணைக்காரன்... அவன் மேற்பார்வையிலே தோட்டம்....துறவு... ரைஸ் மில்... உரக்கடைன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு!... அதனால அவன் கொஞ்சம் பரபரப்பாய்... டென்ஷனாய்த்தான் இருப்பான்!... பல பிரச்சனைகள் இருக்கிற மனுஷன் கிட்ட நீ சூழ்நிலை தெரியாம ஏதாவது பேசினா அவன் கோபப்படத்தான் செய்வான்!... அதுக்காக அவனுக்கு உன் மேல அன்பே இல்லைன்னு நீயா முடிவு பண்ணிடக் கூடாது"


சாவித்திரி தலை குனிந்து நிற்க, "சாவித்திரி... ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?... உன் புருஷனுக்கு நீயே ஒரு வசிய மருந்துதான்!.. போய் வசியம் பண்ணி சந்தோஷமாய் இருப்பியா?...அதை விட்டுட்டு" என்று சொல்லி அவர்கள் இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தான் தண்டபாணி.


மறுநாள் செய்தித்தாளில் "வசிய மருந்து என்னும் பெயரில் அதீத போதை வஸ்துவைக் கொடுத்து பலருக்கு உயிராபத்தை ஏற்படுத்திய போலிச் சாமியார் சிவனாண்டி கைது" என்ற செய்தி வந்திருக்க, அதை எடுத்துக் கொண்டு ஈஸ்வரியிடம் ஓடினாள் சாவித்திரி.


 (முற்றும்.)


-முகில் தினகரன்,

கோயம்புத்தூர்.