tamilnadu epaper

வலி

வலி

 

-திருமாமகள்


 கல்யாணம் களை கட்டிக் கொண்டுதான் இருந்தது. பத்து வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் சொந்த பந்தங்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், முகம் மாறி போனதால், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்ய வேண்டிய நிலைமை. 


 ஆனால் சுபா தான் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள். கூடப் பிறந்தவர்கள் ஐந்தாறு பேர் இருந்தாலும், ஏதோ ஒதுக்கி வைக்கப்பட்டது போல ஒரு பிரம்மை.

மனதிலும் அந்த வலி இருக்கத்தான் செய்தது.


 காரணம் இல்லாமல் இருக்குமா? எல்லோரும் தங்கள் குடும்பம் அவர்கள் வாழ்க்கை வேலை, அவர்களுக்கு சேமிப்பு என்று வசதியாக செட்டில் ஆகிவிட்ட நிலையில் இதுவரையில் அறுபது ஆகியும், ஓய்வுக்குப் பிறகும் வாடகையை கொடுத்துக் கொண்டு கல்யாணம் ஆகாத பெண்களை வைத்துக்கொண்டு, எல்லோரிடமும் அவள் பாவம் செய்திருக்கிறாள் அதனால்தான் அவளுக்கு அப்படி என்று பெயர் வாங்கிக் கொண்டு, வாழ்க்கை இப்படி ஓடினால் அவள் எப்படி ஒதுங்காமல் இருப்பாள்.


 சுபாவிற்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். ஒரு காலகட்டத்தில் எல்லோருக்கும் விழுந்து விழுந்து உதவி செய்துவிட்டு தன்னுடைய கஷ்டத்தை மறைத்துக் கொண்டு எல்லோருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் அவள் சிரித்து பேசாததன் காரணம் அவளுக்கு உள்ளே அதிகமாகி கொண்டிருக்கும் பிரச்சினை தரும் வலி என்பதை புரிந்து கூட கொள்ளவில்லை யாரும். சுபாவின் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. 


 சுபா நின்று கொண்டிருப்பது தெரியாமலேயே உடன் பிறந்தவர்கள் இவளைப் பற்றி பேசியது மனதுக்குள் வருத்தத்தை ஏற்படுத்தத் தான் செய்தது. 


 " பேசாம இரு... நான் சித்திய மடக்குறேன் பாரு உன்ன போல உண்டா... அப்படின்னு சித்தியை சொல்லிட்டா அப்படியே பொசுக்குன்னு கண்ணுல கண்ணீர் விட்டுருவா, சித்தி, மாமா, அத்தை மாதிரி உறவு கிடைக்குமான்னா போதும்... பிளாட் ஆயிடுவா சித்தி.... இப்ப கல்யாணம் நல்லா நடந்தாகணும், நாமெல்லாம் ஒரு வாரம் நாள் லீவு போட்டு வந்திருக்கோம்... ஜாலியா இருக்கணும், சித்தி மூட் அவுட் ஆகி, எல்லாம் பாழ் பண்ணிடுவா....அதுக்கு சித்திய நாம்ப ஈஸியா ஏமாத்தணும்... திஸ் இஸ் மை பிளான்..." இது நான் கையில் எடுத்து வளர்த்த அக்கா குழந்தை. வளர்ந்து ஏமாற்றகிறது.


 ஏதும் தெரியாதது போல் இருக்க வேண்டிய நிலைமை. இவர்கள் ஏன் எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.


 அனுமார் ராமரையும் சீதையும் தன்னுடைய நெஞ்சைப் பிளந்து காண்பித்து விட்டார். என்னுடைய மனதுக்குள் எதுவும் இல்லை என்று சொன்னால் இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

 

 இத்தனைக்கும் சுபா யாரையும் முறைத்துக் கொண்டதில்லை. பொறாமை பட்டதில்லை. சிறுவயதில் இருந்தே அவ்வளவு பக்குவம். கொடுமைப்படுத்தும் கணவனை பற்றி கூட காமித்துக் கொள்ளாமல் சொந்த காலில் நிற்கும் சுமைதாங்கி.   


 அம்மா நீ இப்படி ரொம்ப ஓவரா உன் கஷ்டத்தை யார்கிட்டயும் காமிக்காம இருந்ததுனால தான்மா எல்லாரும் உன் தலைமையில ஏறி உக்காந்துக்குறாங்க என்று அவளுடைய பெண் சொன்ன போதும் கூட கேட்டதில்லை.


 இங்க பாருமா எனக்கு கழிவிரக்கம் பிடிக்காது நம்மை அது அதல பாதாளத்தில் தள்ளிடும். என்று சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க போய்விடுவாள் சுபா.


 மண்டபத்தில் போவோரும் வருவோரும் கலகலவென்று சொந்தங்கள் சிரித்து பேசுவதும் மகிழ்வதும் குழந்தைகள் குறுக்கும் நெடுக்கம் ஓடுவதும் ரொம்பவும் அழகுதான்.


 மண்டபத்துக்குள்ள காலை எடுத்து வைக்கும் போது கூட சாய்ராம் என்று சொல்லிக் கொண்டுதான் காலை வைப்பாள் சுபா. எந்தவித எமோஷனையும் காண்பித்து விடாமல் கண்களில் கண்ணீர் வராமல் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் கடவுளே. அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு திருமணம் செய்கிறார்கள் அந்த குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டுதான் உள்ளே நுழைவாள். அப்படி ஒரு சுயகாட்டுப்பாடு உள்ள சுபாவை பார்த்து கண்டபடி பேசியவர்களை என்னவென்று சொல்வது.


இந்த முறை இதை வேறு விதமாகத் தான் டீல் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் தோன்றியது சுபாவிற்கு.


 சுபாவின் சொந்த சகோதரிகள் சகோதரன் எல்லாரும் ஒரு இடத்தில் குழுமி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். இவள் எல்லார் கண்களி படுவது போல் கையில் போனை எடுத்துக் கொண்டு பின்னால் சென்று மறைவில் நின்று கொண்டாள். மற்றவர்கள் தன்னுடைய உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு முன்னால் அதை கட்டுப்படுத்திக் கொள்ள ஒரே வழி இது தான் என்று யோசித்து சகோதர சகோதரிகள் இவர்களை நெருங்குவதற்கு முன் போனை கையில் எடுத்தாள்.


" ஏய் நான் தான் சுபா பேசுறேன் நான் இப்போ ஒரு கல்யாணத்துல இருக்கேன்... அக்கா பையன் கல்யாணம்... உனக்கு என்ன வேணும் சொல்லு"என்றாள்.


"......."


" அப்படியா நான் சொல்ற ஒரு விஷயத்தை நீ கேட்டுக்கோ... குற்றம் பார்த்தோம்னா சுற்றம் இல்லை... என்னோட மனசோட கஷ்டம் உனக்கு நல்லா தெரியும்... ஆமாம்... அவருக்கு மேஜர் ஆக்சிட்டெண்ட்... ம்... இத பாரு எல்லாரும் கல்யாணத்துக்கு சந்தோஷமா வந்திருக்காங்க இந்த சமயத்துல நாம நம்ம கஷ்டத்தை காமிச்சுகிட்டா... அவங்களால நிம்மதியா இருக்க முடியாது அவங்க சந்தோஷமும் ஸ்பாயில் ஆயிடும்... அதனால நான் உள்ளே வர்றப்பவே கடவுளை வேண்டிட்டு வந்தேன் எல்லாரும் என்கிட்ட வந்து ஏன் உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு கேக்குறதுக்கு முன்ன... கலகலன்னு சிரிச்சு பேசி அவங்கள நல்ல மூடு கொண்டு வரணும்... அதுதான் நான் எடுத்திருக்கிற முடிவு... நீ எதைப் பத்தியும் கவலைப்படாத...நான் சமாளிப்பேன்...." பேசிவிட்டு வெளியில் வந்த பொழுது சுற்றி சுபாவை சகோதர சுற்றி சகோதரிகள்.


" என்னம்மா நீ எப்ப வந்த? " என்றனர் சுபாவை பார்த்து.


" இப்பதான் அக்கா, இப்பதான் வந்தேன் அண்ணா... என்ன எல்லாரும் எனக்காக சாப்பிடாம வெயிட்டிங்கா... வாங்க வாங்க போய் ஒரு டிபனை வெட்டு வெட்டலாம்.. " என்றபடியே வேகமாய் டிபன் செஷனில் அவர்களுடன் நுழைந்தாள் சுபா.


 சுபாவிற்கு தெரியும் அவர்கள் அவளைப் பார்த்த பார்வை. கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே போகும் வரை இந்த வேஷம் தேவை தான். நினைத்து கேசரியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்


" பாட்டி..." என்று வந்து கட்டிக் கொண்டான் சுபாவின் இன்னொரு அக்காவின் பேரன்...


 குழந்தைகள் என்றுமே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். சுபா குழந்தையை உச்சி முகர்ந்தாள்.


 அவள் பெண் அவளை பார்த்த பார்வையில் 'நீ கிரேட் மா' என்பது புரிந்தது.


சுபாவின் வலிக்கும் தற்காலிக விடுப்பு.