வணக்கம்
10.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் முடிவு கிடைக்காததற்காக மத்திய அரசு மீது நீதிமன்ற வழக்கு தொடர்வது என்பது ஏற்புடையதே. தற்போது ஆளுநரை அறிவுறுத்தி வந்த தீர்ப்பு இத்தகைய உத்வேகத்தைத் தந்திருக்கும்.
தொடர்வண்டி நிலையம் செல்லும் போதெல்லாம் 'பயணிகளின் கனிவான கவனத்திற்கு' என்ற தமிழ்ச் சொற்றொடரை உருவாக்கி தமிழில் அறிவிப்பு செய்யத் தூண்டி தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் அச்சொற்றொடர் மூலம் குமரிஆனந்தன் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.
ஆன்மீகத் துறவி மகாவீரர் தாள் போற்றுவோம்.
ரீல்ஸ் மோகம் தண்டவாளத்தில் தலை வைத்து படம் எடுக்கத் தூண்டும். இந்த அடிமைத்தனத்துக்கு ஆளாகிய உத்திர பிரதேச வாலிபரின் கைது நடவடிக்கை இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க உதவும்.
காற்று சூரிய மின்உற்பத்தியில் மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கும் நமது இந்தியாவிற்கு வாழ்த்துகள்.
லோகோ பைலட்களுக்கு உணவு இயற்கை உபாதைகளுக்கு இடமில்லை என்பதை ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசித்து நாம் நம்முடைய கஷ்டங்களை அவனருளால் அகற்ற முனைவோம்.
முகம் பராமரிப்பு டிப்ஸ். பெண்களுக்கு வரப்பிரசாதம்.
பணவீக்கத்தை விட அமெரிக்காவின் வரிவிதிப்பே கவலை அளிக்கிறது. என்ற ரிசர்வ் வங்கி கவர்னரின் கவலை நியாயமானது. வரி வரி என்று தீட்டிக்கொண்டு போகும் அமெரிக்க அதிபரின் செயல் அவர் மீது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மின் வாகனங்களுக்காக தமிழகம் முழுவதும் பொது சார்ஜிங் மையம் அமைக்க இருப்பது பாராட்டுக்குரியது. தற்போது பெருகி வரும் எலெக்ட்ரானிக் பைக், கார்கள் உபயோகிப்பாளர்களுக்கு இது பேருதவி.
மீண்டும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வேயின் அறிவிப்பு ஆறுதல் தருகிறது. மக்களுக்கு பயன் தரும் இது போன்ற தொடர்வண்டிகளை நிறுத்தும் முன் சற்று யோசிக்க வேண்டும்.
திருப்பதி காட்பாடி இடையே இருவழி ரயில் பாதை அவசியமான ஒன்று.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )