தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும் பொன்முடியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர்.
ஒரு அமைச்சர் தன் வாயினால் பதவியை இழந்தார். மற்றொருவரோ தன் கையினால் பதவி இழந்தார் என்று நகைச்சுவையாக சமூக வலைத்தளங்களில் பலரும் பேசுகின்றனர்.
ஆளுங்கட்சி மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு இதைப் போன்று இன்னும் எத்தனையோ மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் கோவில் உண்டியலில் கையை விட்டு திருட முயன்ற திருடன் கை மாட்டிக் கொண்டதால் கையை வெளியே எடுக்க முடியாமல் இரவு முழுக்க தவித்து இருக்கிறான். மறுநாள் காலையில் தீயணைப்பு படையினரும் போலீசாரும் வந்து அவனை காப்பாற்றி கம்பி எண்ண வைத்திருக்கிறார்கள்.
" கையும் களவுமாக " பிடிபடுதல் என்பது இதுதான் போலும் !
இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது என்று தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கொந்தளித்து இருக்கிறார். இவரது ரத்தமும் நிச்சயம் கொந்தளித்து இருக்கும்.
இனியாவது தினசரி உலகம் சுற்றுவதை கொஞ்சம் நிறுத்தி தாய் நாட்டின் பிரச்சனைகளின் மேல் கவனத்தை செலுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
சித்திரை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி இருக்கின்றனர்.
அவர்கள் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அருகில் ராமேஸ்வரம் நகரத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வந்த கழிவுநீர் சாக்கடை தன்னுடைய பாவத்தையும் தீர்த்துக் கொள்ள அக்னி தீர்த்தத்தில் சங்கமம் ஆகிக் கொண்டிருந்ததாம்.
பலரும் அதைக்கண்டு முகம் சுழித்து கடலில் இறங்காமலேயே கொஞ்சம் தீர்த்தத்தை கையில் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு சென்றார்களாம்.
இப்படி சாக்கடையை மக்கள் புனித நீராடும் இடத்தில் கலக்க விடுவது அரசின் தோல்விக்கும் அலட்சியத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் கட்ட வேண்டியது அவசியம்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்