tamilnadu epaper

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி (மே 2)

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி (மே 2)


ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் திருவாதிரையில் ஆசூரி வம்சத்தில் கேசவப் பெருமாள் தீக்ஷிதருக்கும் காந்திமதி அம்மையாருக்கும் அனந்தன் அம்சமாக பிறந்தார்.


இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள் இவரது அம்மானான பெரிய திருமலை நம்பிகள் குழந்தை இலட்சுமணனர் போல் இருந்ததால் இவருக்கு இளையாழ்வார் என்ற பெயரைச் சூட்டினார். சன்னியாச ஆசிரம ஸ்வீகாரம் ஆனவுடன் தேவப் பெருமாள் சாதித்த பெயர் யுதிராஜர்‌. திருவரங்கத்தில் அணியரங்கன் சூட்டிய பெயர் உடையவர். திருக்கோட்டியூர் நம்பியால் சூட்டப்பட்ட பெயர் எம்பெருமானார். ஆண்டாளின் திரு உள்ளத்திருந்த அவாவினை பூர்த்தி செய்ததால் அருளிய பெயர் கோயில் அண்ணன். ஸ்ரீ பாஷயத்தைப் பூர்த்தி செய்தவுடன் சாரதா பீடத்தில் சரஸ்வதியினால் சாத்தப்பட்ட பெயர் ஸ்ரீ பாஷ்யக்காரர். 


ராமானுஜர் தம் வாழ்நாளில் ஒன்பது சமஸ்கிருத நூல்களை இயற்றினார். அவை வேதார்த்த சங்கிரகம், ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், சரணாகதி கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், நித்திய கிரந்தம் ஆகும்.


 இவருடைய தந்தையே இவருக்கு ஆரம்பகால குருவாக இருந்தார். அவர் காலம் முடிந்த பிறகு யாதவ பிரகாசர் என்பவரிடம் பாடம் கற்க ராமானுஜர் சென்றார். குருவை மிஞ்சும் சீடரானார். அதனால் குருவே ராமானுஜரை காசிக்கு அழைத்துச் சென்று கங்கை நீரில் தள்ளிக் கொலை செய்ய நினைத்தார். அப்போது வேடுவன் வேட்டுச்சியாக வந்த பெருமாளும் தாயாருமே அவருக்கு காஞ்சி செல்ல வழி காட்டியதாக கூறுவார்கள். 


ஆஜானுபாகுவாக ஆறடி உயரமும் தோற்றப் பொலிவும் கொண்ட ராமானுஜர் தலைவர்க்குரிய அருங்குணங்கள் யாவும் நிரம்பப் பெற்றவர்.


ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலகட்டத்தில் அதன் நிர்வாகத்தை சீர்மைப்படுத்தினார். நேரம் காலம் தவறாமல் பூஜைகள் நடைபெற பூஜா காலங்களை முறைப்படுத்தினார்.பல குழுக்களை அமைத்து அதற்கு தமது சீடர்களையே தலைவர்களாக அமர்த்தினார்

இந்த கட்டு திட்டங்களை விரும்பாத சிலர் ராமானுஜரை ஒழிக்க திட்டமிட்டனர். இதிலிருந்து ராமானுஜர் தப்பினார். 


மனிதர் அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கையை கொண்டவர் ராமானுஜர். இவர் யமுனாசாரியாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருவட்டெழுத்து மந்திரத்தைக் கற்க விரும்பினார்.


இதற்காக அவர் பதினெட்டு முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு சலிக்காமல் முகம் சுளிக்காமல் நடையாக நடந்தாராம்‌‌. ‌


அவரும் எவரிடமும் இந்த மந்திரத்தை வெளியிட்டு விடக்கூடாது என்ற நிபந்தனையில் கற்றுக்கொண்டார். உபதேசம் பெற்றவுடன் திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி அந்த திருமந்திர பொருளை அனைவரும் கேட்கும் வண்ணம் உறக்க கூறி ஊருக்கே உபதேசம் செய்து விட்டார். 


கோபமடைந்த திருக்கோட்டியூர் நம்பி குரு வாக்கை மீறியதால் நரகம் புக நேரிடும் என்று கூறினார். அனைவரும் முக்தி அடைவார்கள் என்றால் நான் ஒருவன் மட்டும் நரகம் செல்வதை பற்றி கவலை இல்லை மேலும் அது தன் பாக்கியம் என்றார் ராமானுஜர். திருக்கோட்டியூர் நம்பி இதனைக் கேட்டு ஆனந்தம் அடைந்து ராமானுஜரை எம்பெருமானார் என்று கூறி ஆரத் தழுவிக் கொண்டார்‌.


  ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் தம்முடைய பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நாட்டை ஆண்டு வந்த முதலாம் குலோத்துங்க சோழன் சைவத்தில் தீவிர பற்று கொண்டு சைவ வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு பேராதரவை அளித்து வந்தான். 


ராமானுஜரால் வைணவம் பெருகி வருவதைக் கண்ட சில சைவர்கள் கவலையுற்று அரசனிடம் தங்களை கவலையைத் தெரிவிக்க, அவன் காவலர்களை அனுப்பி" நீ ராமானுஜரிடம் சென்று அவரை அழைத்து வா. சைவக் கொள்கைகளை அவர் ஏற்க வேண்டும் என்று நான் விரும்புவதாக அவரிடம் கூறு" என்று கட்டளையிட்டான்.


அரசனின் தொல்லைகளிலிருந்து விடுபட, ராமானுஜர் தமது சீடர்களுடன் மைசூர் சென்றார். திருநாராயணபுரத்தில் கோயில் கட்டினார். டில்லி சென்று காணாமல் போன 'இராமப் பிரியா" விக்ரகத்தை மீட்டு வந்தார். மேல்கோட்டையில் தங்கியிருந்து

பல பணிகளை மேற்க் கொண்டு சோழன் இறந்த பிறகு ஸ்ரீரங்கம் திரும்பினார்.


"பிரஹ்மத்தை நேராக உயர்த்துணரும் அனுபவமே உபாசனை. பற்றை ஒழிப்பதும் பாவங்களின்றும் நீங்கப் பெறுவதும் ஞானத்தினால் நிகழ்வதாகும். உலகில் எல்லா பொருள்களும் என்னை பொருத்தவரையில் சமம். உயர்வு தாழ்வு கிடையாது‌‌. ஜாதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அறிவோர் எளியோர் என்று நான் வேறுபாடு பாராட்டுவதில்லை" என்பவை ‌ ராமானுஜரின் அமுத மொழிகள்.


தீர்க்காயுசு என்ற முழுமையான வாழ்வு சுற்றான 120 ஆண்டுகள் வாழ்ந்தவர் ஸ்ரீ ரமானுஜர். இவர் இந்தியா முழுவதும் நீண்ட புனித பயணம் செய்தவர். திருப்பதி மலைகளில் ராமானுஜர் தவழ்ந்து கொண்டே சென்றார். தம் பாதங்களை வைத்துக் 

களங்கப்படுத்தக் 

கூடாதென்பதற்காகவே அவர் இவ்வாறு சென்றார்.



தமது இறுதி காலத்தில் அவர் 'எண்பத்திரண்டு வார்த்தைகளை' அருளிச் செய்ததாக வைஷ்ணவ சம்பிரதாய வழக்கு.

1137 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் இறைவனடி எழுந்தருளிய ராமானுஜர் கோயிலுக்குள் அடக்கம் செய்யப்பட்டார். ராமானுஜர் விக்ரகம் திருப்பதி, காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


தீண்டாமைக்கு எதிரான போராட்டம் இன்று நேற்று தொடங்கியது அல்ல பல நூற்றாண்டு போராட்டம் அது. அந்தப் போராட்டத்தில் ஒரு முக்கிய கண்ணியாக ஸ்ரீ ராமானுஜர் செயல்பட்டார் என்பதே அவரது பெருமை.


-க.ரவீந்திரன்,

22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,

ஈரோடு - 638002.