இந்த வருடம் எங்கே சுற்றுலா செல்லப் போகிறோம் தெரியுமா?"
முகேஷின் இந்த கேள்விக்கு பெரும்பாலானோரின் பதில்
"கொடைக்கானல்" என்றும்
'ஊட்டி " என்றும் வந்தது!
ஒருசிலர் "குற்றாலம்' என்று சீசனைக் குறி வைத்துச்" />
"இந்த வருடம் எங்கே சுற்றுலா செல்லப் போகிறோம் தெரியுமா?" முகேஷின் இந்த கேள்விக்கு பெரும்பாலானோரின் பதில் "கொடைக்கானல்" என்றும் 'ஊட்டி " என்றும் வந்தது! ஒருசிலர் "குற்றாலம்' என்று சீசனைக் குறி வைத்துச் சொன்னார்கள். எல்லாவற்றுக்கும் மறுத்து தலையசைத்த முகேஷை அவன் அப்படி எந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறான் என அவன் முகத்தையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஃபிளாட்டில் உள்ள முகேஷ் மற்றும் அவனுடைய நண்பர்களும் கோடையில் டூர் செல்வது வழக்கம். பெரும்பாலான செலவுகளை எப்போதும் முகேஷ் ஏற்பது வழக்கம். எல்லோரும் கடைசியில், "நீயே! சொல்லுப்பா!" என்று முடிவுக்கு வந்தனர். எல்லோர் முகத்தையும் உற்றுப் பார்த்து விட்டு, "காஷ்மீர்" என்றான். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லோர் முகத்திலும் கலவரம் தொற்றிக் கொண்டத. "அய்யய்யோ! நான் வரலைப்பா!" என்று ஆளாளுக்கு பின்வாங்கினர். ஏனெனில் சில வருடங்களுக்கு முன் டூர் சென்றவர்கள் சிலரைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது நாட்டில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. அதிலிருந்து இப்போது தான் சகஜ நிலை திரும்பினாலும் பதட்டம் மக்களிடம் தணிந்த பாடில்லை! நீண்ட நேர உரையாடலுக்குப் பின் நண்பர்களில் மூவர் மட்டும் துணிந்து வந்தனர். நம் இராணுவம் இருக்கும் போது நமக்கு என்ன கவலை? என்கிற மனதைரியத்தில்! மீதி ஐந்து பேரும் மறுக்க வும், "ஃபிரென்ட்ஸ்! நாம் போவது பதட்டமாக இருக்கும் இடங்களுக்கு அல்ல! நாம் செல்லவிருக்கும் இடங்கள் பாதுகாப்பு நிறைந்தவை! பெண்கள், குழந்தைகள் கூட வரலாம்! வெறும் சுற்றுலா தலம் மட்டுமே! இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எங்க அப்பா மிலிட்டரி மேன் என்பது உங்களுக்குத் தெரியும்! அவர் இராணுவ முகாமில் பேசி நமக்காக சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். பயப்பட வேண்டாம். இதையெல்லாம் விட ஒரு தேசத்துரோக செயல் செய்யும் தீவிரவாதி தைரியமாக வெளியே வரும் போது நம் நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீருக்கு செல்ல நாம் ஏன்டா பயப்படணும்?" என்று முகேஷ் பொட்டில் அடித்தது போல கேட்க ரோஷம் வந்து அனைவரும் குடும்பத்தோடு வரவும் சம்மதித்தனர்! ஒரு வழியாக முகேஷும் நண்பர்களும் பல கனவுகளோடு பலத்த பாதுகாப்பான ஆடைகளுடனும் காஷ்மீர் செல்ல ஆயத்தமாகினர். காஷ்மீர் நுழையும் முன்பே ஆயுதம் ஏந்திய வீரர்கள் பரபரப்புடன் ஆங்காங்கே அலைவதைப் பார்த்ததும் அனைவருக்கும் இலேசாக வயிறு கலக்கியது. இதெல்லாம் சினிமாவில் பார்த்ததோடு சரி! குல்மார்க், முகலாயர் தோட்டம், சோன் மார்க், டான் ஏரி இதெல்லாம் பார்க்கலாம் என எண்ணியிருந்தனர். வழி நெடுக பார்க்கும் இடமெல்லாம் கொள்ளை அழகு. அதையும் மீறி இதயம் கொஞ்சம் வைகை எக்ஸ்பிரஸ் போல ஃபாஸ்ட் டாக ஓடியது பயத்தில்! காஷ்மீருக்குள் வர வர இவர்கள் சென்ற பேருந்துக்குள் சலசலப்பு குறைந்து நிசப்தமே நிலவியது! கொஞ்ச நேரம் கழித்து "டப்" என்று சப்தம் கேட்க அதைத் தொடர்ந்து ஒரு குழந்தை அழுகுரலும் வர அந்த நேரத்தில் அரண்டு போயிருந்த அனைவரும் பயந்த படி சப்தம் வந்த திசையை நோக்கி பதட்டமாய் பார்க்க.... அங்கே ஒரு குழந்தை பலூனை உடைத்து விட்டு அழுதுகொண்டிருந்தது! துப்பாக்கி வெடித்தது போலவே இருந்தது பஸ்ஸில் இருந்த அனைவருக்கும்! குல்மார்க் சென்று விட்டு திரும்பும் போது ஆங்காங்கே வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. போகும்போது இருந்த சாதாரண சூழல் இப்போது இல்லாதது போலவே தெரிந்தது. இப்போது முகேஷ் கொஞ்சம் அதிருப்தியாக இருப்பது போல இருந்தது! நாம் தான் அழைத்து வந்தோம்! தைரியமாக இருக்க வேண்டும் என்று இஷ்ட தெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டான் யாருக்கும் தெரியாமல்! இது ஒருபுறமிருக்க டிரைவர் மிகவும் எச்சரிக்கையாகவும், பிரஷர் கன்ட்ரோலில் இருக்க எடுத்துச் சென்ற மாத்திரைகளை அவசரமாக விழுங்கினார்! ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பயத்தை காட்டிக் கொள்ளாமல் பில்டப் கொடுத்தபடி வந்து கொண்டிருந்தனர். சிலபேர், வந்து விட்டோமே என்று பெயரளவில் இருந்தனரே தவிர பேருந்தை விட்டு இறங்கவுமில்லை! இவ்வளவு ஏன்? ஜன்னலைக்கூட திறந்து எட்டிப் பார்க்கக்கூட இல்லை! ஒரு மலைப்பகுதியில் காடுகள் நிறைந்த இடத்தில் வந்து கொண்டிருந்த போது டமார் என்று ஒரு மிகப்பெரிய சப்தம் வரவும் டிரைவர் திடுக் கென உதறவும் வண்டி சடாரென பள்ளத்தாக்கில் நின்றது போல ஒருபக்கம் ஏறியும் மறுபுறம் இறங்கியபடியும் நின்றதில் பேருந்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் கண்களை இறுக மூடி கத்தியும் கதறியும் கூப்பாடு போட்டுக்கொண்டேயிருந்தனர்! டிரைவர் மயங்கியபடி ஸ்டியரிங்கில் சாய்ந்திருந்தார். சில நிமிடங்கள் கழித்து தீவிரவாதி தாக்குதலில் யார் சுடப்பட்டது? பேருந்து என்ன ஆச்சு? எனப் பிதற்றியபடி ஒருவரையொருவர் பார்த்தபடி நமக்கு ஓண்ணும் ஆகலையே! அப்போ யாரைச் சுட்டார்கள் என அசுவாசப் படுத்தி கொண்டு இருக்கும் போது ஒருவர் அலறியபடி "அங்கே பாருங்கள்! டிரைவரை சுட்டு விட்டார்கள்!" என்றபடி டிரைவர் சீட்டுக்கு அனைவரும் பதறியபடி ஓடி வர அங்கே டிரைவர் சாதாரண மயக்கத்தில் இருந்தார். அதிர்ச்சியில் இருந்த அவரைத் தூக்கி தண்ணீர் கொடுத்து சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். திடீரென்று பயணிகளில் ஒரு பெண் " அய்யோ! என் குழந்தையைக் காணோம்! என்னாச்சு ன்னு தெரியலையே!" எனக் அழுது கதற அனைவரும் பயந்து சுற்றும் முற்றும் பார்த்தபடி பேருந்திலிருந்து கீழே இறங்கினர். பேருந்தின் கடைசி சக்கரத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தது அந்தக் குழந்தை! எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி இருக்க அப்போதுதான் டிரைவர் கவனித்தார் அதாவது ஒரு பெரிய ஊசி போன்ற கல்லில் டயர் ஏறும் போது டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்திருக்கிறது! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிற நம்மூர் பழமொழி போல ஏற்கனவே தீவிரவாதிகள், துப்பாக்கி சூடு என்கிற பயத்தில் இருந்த நமக்கு யோசிக்க கூட செய்யாமல் தப்பு தப்பாக நினைத்திருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் சிரித்தபடி பேருந்து அருகில் நின்று போன உயிர் திரும்பி வந்ததென சிலாகித்துப் பேசினர்! முகேஷ் வெகு நேரமாக தங்களுக்கு பாதுகாப்பு தருவதாகச் சொன்ன அப்பாவின் மில்ட்ரி நண்பர் மேயருக்கு தொடர்புக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். கிடைக்கவில்லை! டிரைவர் ஸ்டெப்னி டயரை மாட்டி முடிப்பதற்குள் மேயரே முகேஷ் லைனுக்கு வந்தார். லொகேஷனைக் கேட்டுக் கொண்டு தனது வீரர்களுடன் அரை மணி நேரத்திற்குள் ஸ் பாட்டுக்கு வந்தார். நடந்த எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட அவர், " நமது இராணுவம் எப்போதும் உங்களுக்கு துணை இருக்கும்! ஒரு சில அசம்பாவிதங்கள் இங்கே நடப்பது உண்மைதான்! ஆனால் வெளியிலிருந்து வரும் உங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் நடக்க விடாமல் இரவு பகலாக விழித்திருக்கிறோம்! சில பதற்றமான இடங்களை சொல்கிறேன்! அது தவிர்த்து நல்லபடியாக சுற்றிப் பாருங்கள்! ஒருநாள் எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல விடிவு காலம்பிறக்கும்! தைரியமாக சுற்றிப் பாருங்கள்! எந்த நேர உதவிக்கும் இந்த போன் நம்பரை வைத்துக் கொள்ளுங்கள்!" என்று ஒரு கார்டைக் கொடுத்து விட்டுக் கிளம்பினார் மேயர். எல்லோரும் சந்தோஷமாக சுற்றிப் பார்த்து விட்டு பத்திரமாக வந்து சேர்ந்தனர். - பிரபாகர்சுப்பையா, மதுரை-625012. Breaking News:
அந்த ஒரு நிமிடம்