வங்கிக்கடன் மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையா திவால் ஆனவர் என்ற உத்தரவை லண்டன் ஐகோர்ட்டு உறுதி செய்தது
லண்டன்,
இந்தியாவில் உள்ள 17-க்கும் மேற்பட்ட வங்கிகளில், கிட்டத்தட்ட ரூ.9000 கோடிக்கு மேலாக தொழிலதிபரான விஜய் மல்லையா கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பித் தராமல் இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். தற்போது லண்டனில் வசித்துவரும் அவரை, நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு அளித்த உத்தரவாதம் தொடர்பாக கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு, அந்த தீர்ப்பை லண்டன் திவால் மற்றும் கம்பெனி கோர்ட்டில் இந்திய வங்கிகள் தாக்கல் செய்தன.
அத்துடன், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் திவால் மனு தாக்கல் செய்தன. அதன்பேரில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், மல்லையா திவாலானவராக அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், லண்டன் ஐகோர்ட்டு நேற்று இந்திய வங்கிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது. விஜய் மல்லையா திவால் ஆனவர் என்ற உத்தரவை கோர்ட்டு உறுதி செய்தது. மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய மல்லையாவின் 2 மனுக்களையும் கோர்ட்டு நிராகரித்தது.