மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய இளம் வீரரான சுப்மன் கில் விராட் கோலி ஓய்வு குறித்து சில நெகிழ்ச்சியான கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாஜி, நான் உங்களுக்காக எழுதும் எதுவும் நான் என்ன உணர்கிறேன் அல்லது நீங்கள் என் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை ஒருபோதும் உண்மையிலேயே பிரதிபலிக்காது.
எனக்கு 13 வயதாக இருக்கும் போது நீங்கள் பேட்டிங் செய்வதை பார்த்து அந்த வகையான ஒரு ஆற்றலை எப்படி மைதானத்திற்கு கொண்டுவர முடியும் என்பது குறித்து யோசித்தது முதல், உங்களுடன் மைதானத்தை பகிர்ந்து கொண்ட போது , நீங்கள் செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது என்று உணர்ந்தது வரை நீங்கள் ஒரு தலைமுறையை மட்டும் ஊக்கப்படுத்தவில்லை மில்லியன் கணக்கான மக்களின் மனநிலையை மறுவடிவமைத்துள்ளீர்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். எங்கள் தலைமுறை உங்களைப் போன்றே நெருப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். நீங்கள் அளித்த எல்லாவற்றிற்கும் நன்றி. ஓய்வுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.