tamilnadu epaper

விளம்பரச் சுவரொட்டி

விளம்பரச் சுவரொட்டி

பட்டப்பகலில் நடுத்தெருவில் உட்கார்ந்திருந்தாள். சம்மணமிட்டு பளிச்சென்று பட்டுப்புடவை கட்டி உட்கார்ந்திருந்தாள் செண்பகம்.  மூன்று மாதங்களுக்கு முன்பு இதயத் தாக்குதல் நிகழ்ந்து மூன்று இடங்களில் அடைப்பு இருந்து ஒன்றில் ஸ்டண்ட் வைத்துக் காப்பாற்றினார்கள். இப்போது தெருவிற்கு வந்துவிட்டாள்.
    காரணம் தவமாய் தவமிருந்து என்று சொல்வார்களே அப்படி இருந்து பெற்றபிள்ளை மோகனும் அவனின் மனைவி வசந்தியும்.
    செண்பகத்தின் அண்ணன் மகள்தான் வசந்தி. சொந்தம் என்று விரும்பியது சொந்தமற்றுப்போனது. செண்பகத்தின் கணவன் கோபி தன்னுடைய வாழ்நாளில் ஈட்டிய பணத்தில் சேமித்ததில் இப்போதிருக்கும் மனையை வாங்கினான். பணிநிறைவு பெற்றதும் கிடைத்த பணம் அத்தனையையும் போட்டு வாங்கிய மனையில் அழகாக எல்லா வசதிகளுடனும் வீடு கட்டினான். எல்லாம் சரி. மகன் காப்பாற்றுவான் என்று எதிர்பார்த்ததுதான் மாறிப்போனது. செண்பகத்தின் அண்ணி போட்ட திட்டம் வெற்றியாகக் கட்டிய வீட்டை மகன் பெயரில் எழுதி பத்திரம் கைக்குவந்ததும் கோபியும் செண்பகாவும் தெருவுக்கு வந்துவிட்டனர்.
              மோகன் உங்கம்மா.. இதய நோய் உள்ளவ. அவளால எங்கேயும் போகமுடியாது. கொஞ்ச காலத்துக்கு ஏசி அறையில் இருந்தாதான் உடம்பும் மனசும் நல்லா இருக்கும். நான் வெளியே வராண்டாவில் படுத்துக்கறேன். உங்கம்மாவ மட்டும்.. உள்ள படுத்துக்க அனுமதி என்று கேட்டான்.
    தான் ஈட்டிய சொத்தில் தனக்கே பெற்ற மகனிடம் அனுமதி கோரும் நிலைமை எதிரியாகவுள்ள தகப்பன் நிலையிலுள்ளவருக்குக் கூட வரக்கூடாது. கோபிக்கு வந்துவிட்டது.
            என்னோட மனைவி ஏசி இல்லாம இருக்கமுடியாது. நீங்க என்ன செஞ்சீங்க. இது உங்க கடமை. வீட்டைவிட்டு வெளியே போங்க ரெண்டுபேரும் என்று விரட்டிவிட்டான். புகார் கொடுத்து ஆர்டிஓ வரை வந்து பார்வையிட்டும் மோகனும் மனைவியும் கதவைத் திறக்கவில்லை.
          கோபி இன்னமும் பெற்ற பாசத்தில் தவித்தான். மனைவியா? மகனா? 
    செண்பகம் ஒரு முடிவு எடுத்தாள். தெருவுக்கு வந்தாயிற்று. இனி மேல் என்ன? கீழ் என்ன? கோபியை அழைத்துக்கொண்டு பிளெக்ஸ் அடிக்கும் கடைக்குப் போனாள். எதுக்கு என்று கோபி கேட்டான்.
           நமக்கு ஒரு முடிவு வேணுமில்ல என்றாள். கோபிக்குப் புரியவில்லை.
           பிளெக்ஸ் கடையில் இப்படி அடிக்கச்சொன்னாள்.
          என் பெயர் செண்பகம். என் கணவர் பெயர் கோபி. என் கணவர் சுய சம்பாத்தியமாகச் சம்பாதித்துக் கட்டிய வீட்டை என் மகன் மோகன் அவன் மனைவி வசந்தி அபகரித்துக்கொண்டு எங்களை தெருவுக்கு விரட்டிவிட்டார்கள். இப்போது நாங்கள் தெருவில் நிற்கிறோம். நான் இதய நோய் உள்ளவள். எனக்கு நீதிவேண்டும். ஆகவே இந்த அறிவிப்பைப் பார்க்கும் வழக்கறிஞர் எவரேனும் என் சொத்தை மீட்டுக்கொடுத்தால் சொத்தின் மதிப்பில் பாதியை வழக்கறிஞருக்குக் கொடுக்க மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறேன். இதற்காக திரு மோகனுக்கும் அவர் மனைவிக்கும் தண்டனையும் பெற்றுத்தரவேண்டும். இப்படிக்கு செண்பகம் கணவர் பெயர் திரு கோபி. 
           இதுக்குக் கீழே எங்க ரெண்டு பேர் போட்டோவையும் போட்டுடுங்க.. இது பத்து பிளெக்ஸ் அடிச்சுக் கொடுங்க. முக்கியமான இடத்துல எல்லாம் கட்டணும். நோட்டிஸ் 100 அடிச்சுக் கொடுங்க ஒவ்வொரு செய்தித்தாளிலும் வச்சு அனுப்பறதுக்கு என்றாள்.
              கோபி மிரண்டுபோயிருந்தான் செண்பத்தின் செயலுக்கு.

ஹரணி, தஞ்சாவூர்- 2