tamilnadu epaper

வீட்டு உணவா? வெளி உணவா?

வீட்டு உணவா? வெளி உணவா?

 

தினசரி வீட்டு உணவா? வெளி உணவா? என்பது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் பட்டிமன்றம். முன்னொரு காலத்தில் வெளி உணவு என்ற பேச்சுக்கே இடமில்லை. வெளி உணவு கல்யாணம் போன்ற விஷேடங்களில் மட்டுமே. மற்றபடி வெளியே உணவு வாங்குவது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்போது இவ்வளவு உணவு கடைகளும், பேக்கரிகளும் கிடையாது. நகரில் சில பிரபல ஹோட்டல்கள் மட்டுமே. 


ஹோட்டலில் போய் உணவருந்துவது என்பதெல்லாம் பெரியோர்கள் அனுமதிக்காத ஒரு விஷயம்.

எங்கேயாவது வெளியூர் போனால், ஹோட்டலில் சாப்பிடுவது மட்டுமே.. அதுவும் அந்த ஊரில் தெரிந்த உறவினர் இருந்தால் அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு. அப்போதெல்லாம் விருந்தினர் அடிக்கடி வருவதும் அவர்களை உணவருந்த சொல்வதும் வீடு தோறும் நடக்கும் ஒரு விடயம். விருந்தினருக்கு சமைக்க எப்போதுமே வீடு ஆயத்தமாக இருக்கும். ஆண்கள் வேலை விஷயமாக வெளியே தங்கி இருந்தால் தான் ஹோட்டல்களில் சாப்பிடுவார்கள்.


காலம் கொஞ்சம் முன்னேற எப்போதாவது வெளியே வாங்குவது என்ற ஏற்பட்ட பிறகு கூட விருந்தினர் வந்தால், அவர்களுக்கு தெரியாமல் பின் வாசல் வழியாக ஒரு தூக்கை கொடுத்துவிட்டு ஏதாவது ஹோட்டலில் வாங்குவோம். அதுவும் எப்போதாவது. வெளியே வாங்குவது தெரிந்தால் அது வீட்டிற்கு ஒரு அவமானம் போல நினைத்ததொரு காலகட்டம்.அதனால் கல்யாண வீடுகளில் ரசித்து சாப்பிடுவோம்.


காலம் என்று எவ்வளவோ மாறிவிட்டது. வீட்டு சாப்பாடு பாதியானால் வெளி சாப்பாடு பாதிநாள் என்றாகிவிட்டது.

7×3 (வாரத்தின் ஏழு நாளும் மூன்று வேளையும்) சமைப்பது என்பது அனேகமாக யார் வீட்டிலும் காண முடியாத ஒரு விஷயமாகிவிட்டது. அதுவும் இந்த தலைமுறைக்கு தொடர்ந்து சமைப்பது என்பது இல்லாத காரியம். காரணம் பாதி பேர் வேலைக்குச் செல்லும் பெண்கள். அழுத்தும் வேலை பழு. இரவு தாமதமாக வீடு திரும்பும் போது அலுப்பில் சமைப்பது இயலாத காரியமே. கூட்டுக்குடும்பமும் வழக்கொழிந்துவிட்டது. வீட்டில் சமைப்பதற்கோ அல்லது சமையலுக்கு ஆள் வைத்து கண்காணிப்பதற்கோ பெரியவர்கள் கிடையாது. அதற்கு சாட்சி தினமும் தெருக்களில் அலையும் ஸ்விகி, சோமேட்டோகாரர்கள்.. பீட்சா பர்கர் என்று எதை எடுத்தாலும் ஆர்டர் பண்ணினால் வீட்டுக்கு வரும் வசதி.. 


விதவிதமாக சாப்பிடும் ஆர்வம். உள்ளூர் உணவிலிருந்து வெளிநாட்டு உணவு வரை ஹோட்டலில் கிடைப்பது .. செலவைப் பற்றி கவலைப்படாமல் வெளியே போய் சாப்பிடுவது .. அதுவும் குடும்பத்தோடு வாரம் ஓரிருமுறையாவது ஹோட்டலில் சென்று சாப்பிடும் கலாச்சாரம் பெருகிவிட்டது. எனவே முற்றிலும் வீட்டு உணவு என்பது எந்த வீட்டிலுமே பார்க்க முடியாத விஷயமாகிவிட்டது.


ஒருமுறை குழந்தைகள் மருத்துவர் ஒருவர் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டபோது அவரிடம் தாய்மார்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு இளம் தாய் எழுந்து 

"டாக்டர் நாங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் எது ஆரோக்கியமானது? எது ஆரோக்கியமற்றது?" என்று கேட்டார்.

அதற்கு அந்த மருத்துவர் ஒரே வரியில் பதில் அளித்தார்..

"உங்கள் பாட்டி உங்களுக்கு என்னவெல்லாம் வீட்டில் செய்து கொடுத்தாரோ அதெல்லாம் ஆரோக்கிய உணவு.. நீங்கள் எதையெல்லாம் கடையில் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கிறீர்களோ அதெல்லாம் ஆரோக்கியமற்ற உணவு" என்றார். சிந்திக்க வேண்டிய விஷயம். குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று பாக்கெட்டில் அடைத்த தின்பண்டங்கள் நிறையவே வாங்கிக் கொடுக்கிறோமோ என்று தோன்றுகிறது.


என் வீட்டை பொருத்தவரை நானே என் கையால் எங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ப, உடல்நிலைக்கேற்ப, சமைப்பது தான் எனக்கு பிடிக்கும். முதல் காரணம் நாமே சமைக்கும் போது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சமைப்போம். வீட்டு உணவில் எந்தவித செயற்கை நிறமிகள்,

கெமிக்கல் கலந்த மணமூட்டிகள், ருசிக்காக சேர்க்கப்படும் எந்த வேதியல் பொருளும் சேர்ப்பதில்லை. வயதின் காரணமாக முழுக்க வீட்டில் செய்ய இயலாத, உடல் நலமில்லாத சமயத்தில், அது போலவே ஆரோக்கியமாக சமைக்கப்படும் மெஸ்களில் வாங்கிக் கொள்வோம். 


 வீட்டில் சமைக்க முடியாத உணவை சாப்பிடுவதற்கு ஆசைக்காக மாதத்தில் ஓரிரு முறை ஹோட்டல் செல்வோம்.மற்றபடி சரிவிகித சத்துணவாக வீட்டில் சமைக்கப்படும் உணவுதான் எங்கள் சாய்ஸ் எப்போதுமே.



-தி.வள்ளி

திருநெல்வேலி