tamilnadu epaper

வெற்றியின் ஆணிவேர்

வெற்றியின் ஆணிவேர்


மதிப்பெண் மட்டுமே

உன் மதிப்பை

உயர்த்தும் என

நினைத்து

உமது அறிவுக்கண்ணை

இழக்காதே மாணவனே...!


மதிப்பெண் குறைந்து விட்டதென

குழம்பி நிற்காதே...

மதிப்பெண்ணை

துச்சமாக்கு

அறிவுக்கண்ணை

உச்சமாக்கு...!


எதிர்பாராதவற்றை

ஏற்றுக்கொள்ளும்

மனப்பக்குவத்தை

வளர்த்துக்கொள்...


உன்னை வீழ்த்த இங்கு ஒருவருமில்லை

உணர்ந்து நீ செயல்பட்டால்

தூற்றும் உலகம்

ஒரு நாள் போற்றும்...!


புறமுதுகிட்டு பேசுவோரை

புறம் தள்ளிவிடு

நையாண்டி பேசுவோரை

நகைப்புடன் கடந்து விடு...!


தோல்வியும் வெற்றியும்

எங்கும் நிலைத்திருப்பதில்லை

தோல்வியால் நாம் ஏன்

துவண்டே இருக்க வேண்டும்

வெற்றியும் தோல்வியும்

ஒன்று போல வரவேற்போம்

ஓய்ந்து போகாதே...


தன்னம்பிக்கை தீயை

எரியவிட்ட எடிசன் கூட

தோல்வியை முத்தமிட்டவன் தான்...!


நாம் மட்டும் ஏன்

சத்தமிட்டு அழ வேண்டும்

சாகசம் புரிய அவகாசம் எடுத்துக்கொள்...

வறட்சியைக் கண்டு உழவன் அழுதால்

இங்கு பலர்

உணவின்றி

மாண்டு போயிருப்பார்கள்

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு

அடுத்த கணம்

பூமி செழிக்கும் நாளை

எண்ணி தன்னம்பிக்கையோடு காத்துக் கிடப்பான்...!


தோல்வி என்பது

சிறு பிழைதானே

திருத்திக்கொள்

பயிற்சியை வளர்த்துக்கொள்

தொடர்ந்து முயன்று கொண்டே இரு...

உனது இலக்கை

அடையும்வரை

நம்பிக்கையை

நிலையாய் வை..!

வெற்றியின் ஆணிவேர்

ஆழமாகும் ....!



-கூத்தப்பாடி மா. பழனி,

தருமபுரி