ஒரே வண்டியில் புறப்பட்டார்கள் கோபாலும் கண்ணதாசனும்.
அவர்களின் மேலதிகாரி ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் இருக்கிறார். சொஞ்சங் காயங்களோடு தப்பிப் பிழைத்துவிட்டார்.
இருவரும் பார்க்கப்போகிறார்கள்.
வழியில் கடைத்தெருவைக் கடக்கும்போது வண்டியை நிறுத்தினான் கோபால்.
எதுக்கு நிறுத்தறே? என்றார் கண்ணதாசன்.
வெறுங்கையா எப்படிப் போறது? அவர் நம்மோட மேலதிகாரி. அடிபட்டுக் கிடக்கிறார். ஏதாச்சும் ஹார்லிக்ஸ், பழங்கள் வாங்கிட்டுப்போவேண்டாமா கண்ணதாசா? என்றான்.
சரி வாங்கிக்க. எனக்கு எதுவும் வேண்டாம்.
நீ வாங்கலியா?
இல்லை.. நீ மட்டும் வாங்கிக்க நான் எதுவும் வாங்கலே என்றான் கண்ணதாசன்.
வெறுங்கைய வீசிட்டு வரப்போறியா?
ஆமாம்.
நாம பார்க்கப்போறது நம்மோட மேலதிகாரிய.. அதுவும் தினமும் ஆபிசுல சந்திக்கிற ஒருத்தரு.
இருக்கட்டும். வேலையை ஒழுங்காச் செய்யறோம்ல.. என்றான் கண்ணதாசன்.
உனக்கு என்ன ஆச்சு? என்று வண்டியை நிறுத்திவிட்டு பழக்கடைப் பக்கம் போய் வாங்கிக்கொண்டு அருகிலிருந்து மெடிக்கல் ஷாப்பில் ஹார்லிக்ஸ்சும் வாங்கிக்கொண்டான்.
சரி நீ வாங்கவேண்டாம்.. நான் பழத்தைக் கொடுக்கறேன்.. நீ இந்த ஹார்லிக்ஸைக் கொடு.. என்றான் விடாப்பிடியாக கோபால்.
உனக்குச் சொன்னாப் புரியாதா.. ரெண்டையும் நீ வாங்கியிருக்கே நீயே கொடு..
சரி உன்னை வற்புறுத்தலே.. ஏன் வாங்க மாட்டேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?
கண்ணதாசன் கோபாலை ஒருமுறைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.
நம்முடைய மேலதிகாரி ரொம்ப வசதியானவர். நிறைய பேர் பார்க்க வருவாங்க. நிறைய வாங்கிட்டு வருவாங்க. குவிஞ்சிக் கிடக்கும்.. யாரும் சீண்டமாட்டாங்க.. நம்மோடதும் அப்படித்தான்.. மேலதிகாரியோ அவர் குடும்பமோ சாப்பிடமாட்டாங்க.. யாருக்காச்சும் தூக்கிக் கொடுப்பாங்க.. நாம கொடுக்கறது பயனா இருக்கணும்.. இதே ஒண்ணும் இல்லாதவங்களுக்கு வாங்கிட்டுப்போனா அவங்களுக்கு இதோட அருமை தெரியும்.. வச்சிருந்து சாப்பிடுவாங்க.. நமக்கும் ஆறுதலா இருக்கும்.. அதனால ஏழைங்களுக்கு ஒண்ணும் வசதியில்லாதவங்களுக்குத்தான் நான் எப்பவும் இதுமாதிரி வாங்கிட்டுப்போவேன் என்றான் கண்ணதாசன்
ஹரணி தஞ்சாவூர்.