ராதிகா அந்தக் காய்கறிக்காரிடம் காய்கள் வாங்குவது எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. காரணம்?... அவள் ஒரு பஜாரி.... பெண் ரவுடி.
அவளை ஓரிருதரம் மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். மார்க்கெட்டுக்கு வெளியே கூடையை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருப்பாள்.
வாங்க வரும் ஆண்கள் கொஞ்சம் ஜோவியலா ஏதாவது பேசி விட்டால் போச்சு... அவ்வளவுதான் ஒரு ஆண் கூட சொல்லக் கூசிடும் கெட்ட வார்த்தைகளை வெகு சாதாரணமாய் எடுத்து வீசுவாள்.
"யோவ்!.. காய் வாங்க வந்தியா?.. இல்லை காய்கறிக்காரியை நோட்டம் போட வந்தியா?... "என்று சொல்லி பெரிய பெரிய ஆபீஸர்களைக் கூட லஜ்ஜையின்றிக் கேட்பாள்.
ஒரு முறை அவள் ஒரு நடுத்தர வயதுக்காரரைப் பேசிய பேச்சை நேரில் கண்டது முதல், நான் அவள் பக்கமே திரும்புவதில்லை.
காய்கறிகளை வாங்கிக் கொண்டு பணம் எடுக்க வீட்டிற்குள் வந்த ராதிகாவை திட்டினேன். அவளைப் பற்றி விலாவாரியாய்க் கூறி விட்டு, 'இனிமேல் இவகிட்ட வியாபாரம் வெச்சுக்காதே!" என்றேன்.
என்னை வினோதமாய்ப் பார்த்தபடியே வெளியே சென்றாள் ராதிகா.
அடுத்த வாரத்தில் ஒரு நாள், ராதிகா இல்லாத நேரத்தில் வந்து நின்றாள் காய்கறிக்காரி.
"அம்மா... இல்லை" வெடுக்கென்று சொல்லி விட்டுத் திரும்பினேன்.
"சார் ஒரு நிமிஷம்!... போன வாரம் நான் வந்திருந்தப்ப நீங்க உங்க சம்சாரத்திடம் பேசியதை நானும் கேட்டேன் சார்!... நானும் அடக்கமான.... சாந்தமான... அமைதியான... பெண்ணாய்த்தான் சார் இருந்தேன்!... என் புருஷன் இறந்ததற்குப் பிறகு இந்தச் சமுதாயம்தான் சார் என்னை மொத்தமா மாத்திடுச்சு!..."
நான் புருவங்களை நெரித்துக் கொண்டு பார்க்க,
"ஆமாம் சார்... இருபதிலிருந்து அறுபது வரைக்கும் எல்லா ஆம்பளைங்களும் ஒரே நோக்கத்தோடதான் என்னைப் பார்த்தாங்க... சீண்டினாங்க!... அதான் என்னை நான் காப்பாத்திக்க பஜாரி வேடம் போட ஆரம்பிச்சேன்!... என் ஆவேச பேச்சும்... அதிரடியான வார்த்தைகளும்தான் சார் எனக்கு ஆயுதங்கள்....கவசங்கள்!" சொல்லி/விட்டு அவள் நிற்காமல் செல்ல,
அப்போதுதான் சில விஷயங்கள் எனக்குப் புரிபடத் துவங்கின.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை.