tamilnadu epaper

"ஆம்பள மனசு'

"ஆம்பள மனசு'

ஒவ்வொரு தடவையும் நான் சண்டை போட்டுக்கிட்டு பொறந்த வீட்டுக்கு வந்துட்டா... என் புருஷன் அதிகபட்சம் பத்து நாள்தான் தனியா இருப்பார்.. அதுக்கு மேல அவரே வலிய வந்து... என்னைச் சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு போவார்!... ஆனா இந்த தடவை ஒன்றரை மாசம் ஆகியும் வரலை!... காரணம் யார் தெரியுமா?... என் மாமியார்க் கிழவிதான்!..." சகுந்தலா பொரிந்து தள்ளினாள்.

 

    "ச்சீய்!... பாவம்டி அந்த வயசான பொம்பளை.... அவ மேல ஏண்டி பழி போடுறே?"அவள் தாய் லட்சுமி சொல்ல.

 

    "பின்னே? ....நான் சண்டை போட்டுக்கிட்டு வந்த மறுநாளே கிராமத்திலிருந்து வந்து மகனோட ஒட்டிக்கிச்சு... அந்தக் கெழவி!... ஒன்றரை மாசமா நல்லா சமைச்சுப் போட்டுட்டு... அப்பப்ப என்ன பத்தியும் நல்லா ஓதிவிட்டுட்டு இருக்கு!.. அதான் மனுஷன் வரலை!... நான் போய் ஒரு ஆட்டம் ஆடிட்டு வந்தால்தான் எல்லாம் சரியாகும் போலிருக்கு!"

 

    "வேண்டாம்... வேண்டாம் நீ போக வேண்டாம்... நான் போய் உன் மாமியார் கிட்ட நாசூக்கா கேட்டுட்டு வர்றேன்!".

               ******

     வீட்டிற்குள் வந்த லட்சுமியை புன்னகையோடு வரவேற்ற சகுந்தலாவின் மாமியாரிடம் நேரடியாகவே கேட்டாள் லட்சுமி.

 

   "நீ பாட்டுக்கு இங்க வந்து மகன் கூடத் தங்கிட்டு... அவனுக்கு மூணு நேரமும் கொறையில்லாம சோறாக்கிப் போட்டுட்டிருந்தா அவநுக்கெப்படி பொண்டாட்டி ஞாபகம் வரும்?... தனியா இருந்து அந்தக் கஷ்டத்தை அனுபவிச்சால் தானே பொண்டாட்டியோட அவசியம் அவனுக்குப் புரியும்?.." 

 

மெலிதாய்ப் புன்னகைத்த சகுந்தலாவின் மாமியார், "அம்மாடி ஆம்பளைங்க.... வெளிப் பார்வைக்குத்தான் முரடு.... ஆனால் மனசளவுல குழந்தைகள் மாதிரி....

இப்படித்தான் எங்க ஊர் பக்கத்தில் ஒருத்தன் பொண்டாட்டி சண்டை போட்டுட்டுப் போயிட்டதால தனியா இருந்தான்... கொஞ்ச நாள்ல மனசு தாங்காமத் தூக்கு போட்டு தொங்கிட்டேன்!... அதை நினைச்சுத்தான் நான் இங்க வந்து மகனுக்கு காவலாய் இருக்கேன்... உன் மகள் திரும்பி வந்தப்புறம் அவளிடம் பத்திரமா அவ புருஷனை ஒப்படைச்சுட்டு நான் பாட்டுக்கு கிளம்பிட்டேயிருப்பேன்!" என்றாள்.   

 

     அதைக் கேட்டு பதிலேதும் பேச முடியாமல் அமைதியாகத் திரும்பினாள் லட்சுமி.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை