tamilnadu epaper

"கடலில் மிதக்கும் காதல்"

"கடலில் மிதக்கும் காதல்"

ஒரு நாள் ரெண்டு நாளல்ல... கிட்டத்தட்ட ஒரு வருஷமா என்னைப் பின் தொடர்ந்து, நான் போகும் இடத்திற்கெல்லாம் வந்து, என் வீட்டிற்கு எதிரேயுள்ள செம்மொழிப் பூங்காவில் என் தரிசனத்திற்காக இரவு நெடுநேரம் வரை தவமிருந்து, ஐம்பது தடவைக்கும் மேல் என்னிடம் நேரடியாக வந்து சலிக்காமல் "ஐ லவ் யூ" சொன்னவன் திவாகர்.

 

    அத்தனை முறையும் என்னிடமிருந்து வெறுப்பான முறைப்பே பதிலாய்க் கிடைக்கும்.  

 

     இன்று காலை என்ன நினைத்தானோ தெரியவில்லை, வேக வேகமாய் வந்து என் கையில் ஒரு காகிதத்தை திணித்து விட்டுச் சென்றான். வேண்டா வெறுப்பாய்ப் பிரித்துப் படித்தேன்.

 

    "நாளை மாலை சரியாக 6 மணிக்கு, பீச்சுக்கு வந்து என்னிடம் "ஐ லவ் யூ" சொல்ல வேண்டும்... 6.01க்கு வந்தாலும் கடலில் பிணமாய் மிதப்பேன்---- இப்படிக்கு திவாகர்."

 

    ஆரம்பத்தில் அக்கடிதத்தை அலட்சியப்படுத்தினேன். மாலை நெருங்க நெருங்க மனம் மாறினேன்.

 

   "பார்க்க நல்லவனாய்த்தான் தெரியறான்.... இவன் காதலுக்குப் பச்சை கொடி காட்டினால்தான் என்ன!?".

    

   மாலை பீச் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். வழியில் ஏதோ ஒரு ஊர்வலத்திற்காக ரோடு பிளாக் செய்யப்பட, தவித்தேன்... துடித்தேன்.

 

  என் தவிப்பை உணர்ந்த இறைவன் உடனே சாலையை திறக்க வைக்க பஸ் கிளம்பியது.

 

  பீச்சில் இறங்கி ஓடினேன். ஓடிக் கொண்டே மணிக்கட்டை உயர்த்தி, நேரம் பார்த்தேன்.

 

    6.01.

 

    தூரத்தில் திவாகர் அமர்ந்திருக்க, நிம்மதியானேன்.

 

    அவன் எதிரே சென்றமர்ந்து "ஐ லவ் யூ" நான் சொல்ல,

 

    தூரத்தில் கைகாட்டினான். 

 

    அங்கே ஒரு கும்பல் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, என்னையும் போய்ப் பார்க்கும்படி கை ஜாடையில் கூறினான் திவாகர்.

 

  குழப்பத்துடன் எழுந்து சென்று பார்த்தேன். 

 

      அங்கே..          

   

       பிணமாய்க் கிடந்தான் திவாகர்.

 

      "வெடுக்"கென்று தலையைத் திருப்பிப் பார்த்தேன் 

 

    திவாகர் அமர்ந்திருந்த இடம் வெற்றிடமாய் இருந்தது.

 

    " வீல்" கத்தியபடி மயங்கினேன்.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை.