tamilnadu epaper

"காசு பணம் துட்டு மணி"

"காசு பணம் துட்டு மணி"

சக ஊழியனான ஆறுமுகத்திடம் சீரியஸாய்ச் சொன்னான் கோபால்.

 

   "ஆறுமுகம்... நாம ரெண்டு பேரும் வீடு வீடாப் போய் கேஸ் சிலிண்டர் டெலிவரி பண்ற சாதாரண ஆளுங்க.... நாம போய் நம்ம வீட்டுக்கு விசேஷத்துக்கு அவங்களையெல்லாம் கூப்பிட்டா கண்டிப்பா வர மாட்டாங்க!.. ஏன்னா அவங்கெல்லாம் பெரிய ஆளுங்க!.. வசதியான ஆளுங்க.... பணக்காரங்க!"

 

   "அது எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே?" ஆறுமுகம் திருப்பிக் கேட்டான்.

 

   "அனுபவம்தான்!... என் மகள் கல்யாணத்துக்கு நான் சிலிண்டர் டெலிவரி கொடுக்கிற ஒரு வீடு விடாமல் எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுத்தேன்!....ம்ஹும்... ஒரு ஆள் கூட வரலை"

 

    கோபால் சொன்ன விஷயம் ஆறுமுகம் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தான் சிலிண்டர் டெலிவரி கொடுக்கும் எல்லா வீடுகளுக்கும் தன் மகளின் கல்யாண அழைப்பிதழை நேரிலேயே கொண்டு போய் கொடுத்தான்.

 

     திருமண நாளன்று ஒரு வீடு பாக்கி இல்லாமல் எல்லா வீட்டிலிருந்தும் ஆட்கள் வந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.

 

    கோபமான கோபால் ஆறுமுகத்திடம் விசாரிக்க,

 

    "கோபால்.... நீ சிலிண்டர் டெலிவரி பண்ற வீட்டிலெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா எக்ஸ்ட்ரா அமௌன்ட் வாங்குவியாமே.... உண்மையா?" கேட்டான்.

 

   "ஆமாம்.... அது வழக்கமா எல்லோரும் செய்யற விஷயம் தானே?".

 

   "ஆனா நான் அப்படி இல்லை.... அவர்கள் கொடுத்தாலும் எக்ஸ்ட்ரா பணம் வாங்க மாட்டேன். அதனாலேயே அவங்க அத்தனை பேரும் என் மேல் ஒரு தனி மரியாதை வெச்சிருக்காங்க!... என்னை அவங்க குடும்பத்துல ஒருத்தரா நினைக்கிறாங்க!... அதனால்தான் என்னை மதிச்சு.... நான் கொடுத்த இன்விடேஷனை மதிச்சு எங்க வீட்டு விசேஷத்திற்கு தவறாம வந்து கலந்துக்கிட்டாங்க!... வந்தது மட்டுமல்ல ஒரு பெரிய கிஃப்ட்டும் கொடுத்திருக்காங்க!... நான் மனிதர்களை மதிச்சேன்... நீ moneyயை மதிச்சே.... அதான் காரணம்!"

 

 கோபால் அமைதியாக நகர்ந்தான்.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை.