அவன் கோபத்தைப் புரிந்து கொண்ட தேன்மொழி வேக வேகமாக" />
தான் வாங்கி வந்த புடவையை, "பிடிக்கவில்லை" என்று முகச்சுளிப்போடு சொன்ன மனைவியைக் கோபமாய் பார்த்தான் துரை.
அவன் கோபத்தைப் புரிந்து கொண்ட தேன்மொழி வேக வேகமாக உள் றைக்குக் சென்று, அதை கட்டிக் கொண்டு வந்து அவன் எதிரே நின்றாள்.
ஆடிப் போனான் துரை. மிக மிக மெல்லிசான அப்புடவை அவளது உள்ளாடைகளையும், உடல் அமைப்பையும், அப்படியே பகிரங்கப்படுத்திக் காட்ட, "ஸாரி தேன்மொழி.. நீ இதைக் கட்ட வேண்டாம்!" என்றான் துரை வேகமாக.
அடுத்த வாரத்தில் ஒரு நாள், சோப் பவுடர் விற்க வந்த சேல்ஸ்கேர்ள் கட்டியிருந்த சாயம் போன பழைய புடவையைக் கண்டு அவள் மீது இரக்கமானாள் தேன்மொழி. தன்னிடமுள்ள அந்தப் புதுப்புடவையை அவளுக்கு தரும் எண்ணத்தோடு கணவனிடம் கேட்டாள்.
அவனோ ஒரே வார்த்தையில் "வேண்டாம்" என்று தீர்மானமாகக் கூறினான். முகம் தொங்கிப் போன தேன்மொழி மெல்லக் கேட்டாள். "ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?".
"த பாரு தேன்மொழி... அந்த பொண்ணு யாரு பெத்த பொண்ணோ?.. பாவம்... வயித்துக் கொடுமைக்காக இந்த வேலை பார்க்குது!... நீ கொடுக்கப் போற அந்தப் புடவை கண்ணாடி மாதிரியிருக்கு!... இதை கட்டிக்கிட்டு அந்த பொண்ணு தெருத் தெருவா... வீடு.... வீடாப் போவா... பார்க்கிற ஆம்பளைங்க அத்தனை பேருமே நல்லவங்களா இருப்பாங்க!ன்னு சொல்ல முடியுமா?... நல்ல பார்வையும் இருக்கும்.... தீய பார்வையும்.... இருக்கும்!.
"புரியிதுங்க.... புரியுதுங்க!" என்றாள் தேன்மொழி இடையில் புகுந்து.
"யெஸ்... அவளுக்கு ஏதாவதொரு விபரீதம் நடந்திட... நாம் காரணமாகி விடக்கூடாது பாரு?.... அதான் வேண்டாம்ன்னேன்!..."
"என் சமத்துப் புருஷா சாஞ்சுக்கோ" என்றபடி கணவனை மார்பில் சாய்த்துக் கொண்டாள் தேன்மொழி.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை