சுமதி... கொஞ்சம் இங்கே வா!... இன்னிக்கு திவாகர் கார் டெலிவரி எடுக்கறானாம்... அதுக்கு முன் பணம் கட்ட ஒரு அம்பதாயிரம் வேணும்னு கேட்டிருந்தான்!.... நான் பேங்கிற்கு போய் லாக்கரிலிருந்து உன்னோட நெக்லஸை மட்டும் எடுத்திட்டு, அப்படியே கோ-ஆபரேடிவ் பேங்க்ல அடமானம் வெச்சு பணம் வாங்கிட்டு வந்திடறேன்!"
மாமியார் சொல்ல பகீரென்றானது சுமதிக்கு. பின்னே?... அவளது நெக்லஸ் கவரிங் ஆச்சு?... கல்யாண சமயத்துல பேசியபடி நகை போடணும் என்பதற்காக நெக்லைஸை மட்டும் கவரிங்ல போட்டுட்டு சீக்கிரத்திலேயே மாற்றித் தருகிறேன் என்று சொன்ன அவளுடைய அப்பாவால் கடந்த ரெண்டு வருஷமாய் அது முடியாமலே போனது.
"போச்சு.... இன்னைக்கு சாயம் வெளுக்கப் போகுது!... என்னோட இல்லற வாழ்க்கை ரெண்டே வருஷத்துல அஸ்தமனமாகப் போகுது!" ரத்த அழுத்தம் எகிற படுக்கையில் சென்று விழுந்தாள். மயக்கமா?... கிறக்கமா? என்றே தெரியாமல் அப்படியே கிடந்தாள்.
திடீரென்று மொபைல் சிணுங்க, எடுத்துப் பார்த்தாள்.
எதிர்முனையில் மாமியார் பதற்றத்துடன், "அய்யோ... சுமதி... மோசம் போயிட்டேன் சுமதி" கதறினாள்.
"என்னங்க அத்தை.... என்னாச்சு?' தெரியாதவள் போல் கேட்டாள்.
" பேங்க் லாக்கரிலிருந்து உன்னோட நெக்லஸை எடுத்திட்டு, பஸ் ஏறி கோ-ஆபரேடிவ் பேங்க் வந்து ஹேண்ட் பேக்கைத் திறந்து பார்த்தேன்.... நெக்லஸைக் காணோம்.. பஸ்ல எவனோ பேக்கை பிளேடு போட்டு நெக்லஸை மட்டும் உருவி விட்டான்!... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல சுமதி"
அதிர்ச்சிக்கு பதில் ஆனந்தமானாள் சுமதி. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அத்தை அதுக்காக நீங்க பதட்டப் படாதீங்க... டென்ஷனாகாதீங்க... பிரஷ்ஷர் உடம்பு உங்களுக்கு" என்று மாமியாருக்கு ஆறுதல் கூறினாள்.
அதே நேரம் அவள் மனம் பிளேடு போட்ட திருடனுக்கு நன்றி சொன்னது.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை