அந்த தனியார் மருத்துவமனையில் திடீரென்று பரபரப்பு தொற்றிக் கொண்டது.
'சர்'ரென்று வந்து நின்ற ஆம்புலன்ஸிலிருந்து ஸ்ட்ரக்சரோடு இறக்கப்பட்ட பெண்ணை அவசர அவசரமாக இழுத்துக் கொண்டு எமர்ஜென்சி வார்டை நோக்கிச் சென்றனர்.
"என்னப்பா என்ன கேசு?" சற்றுத் தள்ளியிருந்த கேஷ் கவுண்டரில் அமர்ந்து நிதானமாய் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த குமார், கௌண்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்தவனிடம் கேட்டார்.
"அதுவா?.. கார்க் கதவு லாக் ஆகிடுச்சு... உள்ளார ஒரு பொண்ணு மாட்டிக்கிச்சு.. ரெண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னாடிதான் கதவை ஓப்பன் பண்ண முடிஞ்சிருக்கு.... உள்ளார பொண்ணு மயங்கி கிடந்திருக்கு.... தூக்கிட்டு வந்துட்டாங்க!... ஹும்... அவ புருஷனெல்லாம் ஒரு மனுஷனா?".
பணம் எண்ணுவதை நிறுத்தி விட்டு அந்த ஆளைப் பார்த்து, "அதுக்கு அவன் என்னைப்பா பண்ணுவான்?" கேட்டார் குமார்.
"சார்... கார்க் கதவு தானா லாக் ஆகலை... அவ புருஷன்தான் அந்த பொண்ணை உள்ளார வெச்சு லாக் பண்ணிட்டு போயிருக்கான்".
"ஏனாம்?".
"அந்தப் பொண்ணு நல்ல சிவப்பா அழகா இருக்கும்... இவன் கரிச்சட்டி கணக்கா இருப்பான்.... அதனால அவளைக் கூட்டிட்டு.... மார்க்கெட்டுக்குள்ளார போனா.... எவனாவது சைட் அடிச்சிடுவானோ?ன்னு பயந்திட்டு காருக்குள்ளாரவே போட்டு லாக் பண்ணிட்டு போயிருக்கான்!... எப்பவும்.... எங்க போனாலும் அப்படித்தான் செய்வானாம்!"
"திக்"கென அதிர்ந்தார் குமார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிக் கொண்டு அவசர அவசரமாய் வீட்டிற்குச் சென்று பூட்டியிருந்த கதவைத் திறந்து, வேகமாக உள்ளே சென்று, தன் மனைவியை நெஞ்சார தழுவிக் கொண்டு, "என்னை மன்னிச்சிடும்மா... இனிமேல் இந்த மாதிரி உன்னை வீட்டுக்குள்ளார வெச்சுப் பூட்டிட்டுப் போக மாட்டேன்" என்றான்.
கணவனின் திடீர் மனமாற்றத்திற்கான காரணம் புரியாமல் விழித்தாள் அந்த மனைவி.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை