tamilnadu epaper

"ராசாத்தியும் கோகிலாவும்"

"ராசாத்தியும் கோகிலாவும்"

தன் போலீஸ்காரக் கணவர் பத்தாண்டுகளுக்கு முன் கொள்ளைக் கும்பலைப் பிடிக்கப் போன இடத்தில் இறந்து விட, அன்றிலிருந்து அந்தப் போலீஸ் உத்தியோகத்தை அறவே வெறுத்தாள் கோகிலா.

 

     அவளை இக்கட்டில் நிறுத்தும் விதமாய் அவள் மகன் பூபதி போலீஸ் உத்தியோகத்திற்கான அப்ளிகேஷனோடு வந்து நிற்க, உக்கிரமாய் வாக்குவாதம் செய்தாள்.

 

 அவன் தன் நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்க, கடைசி அஸ்திரமாய் அழுது பார்த்தாள். அப்போதும் அவன் மனம் கரையாது போக, "போடா.... இனிமே நான் உன் கூட இருக்க மாட்டேன்... நான் பொறந்து வளர்ந்த கிராமத்துக்கே போறேன்... அங்க போய்த் தனியாப் பொழச்சுக்கறேன்!" கிளம்பினாள். 

 

    பூபதி ஆனவரை தடுத்துப் பார்த்தான். முடியாது போக அமைதியாய் நின்றான்.

 

    பேருந்து நிறுத்தத்தில் தன் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம் மெல்ல கேட்டாள் கோகிலா. "நீ.... நீ....ராசாத்திதானே?".

 

   "ஆமாம் தாயி... நீ யாரு?" அப்பெண் விழிக்க.

 

    "என்ன ராசாத்தி... மறந்துட்டியா?... நான்தான் கோகிலா!... உன் மிலிட்டரிக்கார புருஷன்... கார்கில் போரில் இறந்தப்ப நான் இழவுக்கு வந்திருந்தேனே?".

 

      "அட.... கோகிலாவா?... என்னம்மா இப்படி ஆளே மாறிட்டே?" ராசாத்தி புன்னகையோடு கேட்க.

 

    "அது சரி உன் பையன் என்ன பண்ணிட்டிருக்கான் இப்போ?" கோகிலா கேட்டாள்.

 

     "மிலிட்டரில தான் இருக்கான்'

 

     "என்னது... மிலிட்டரியா?... என்ன ராசாத்தி அந்தப் பாழாப் போன மிலிட்டரில சேர்ந்துதானே உன் புருஷன் செத்தான்... மறுபடியும் பையனையும் அங்கேயே அனுப்பி வச்சிருக்கியே, உனக்கென்ன பைத்தியமா?".

 

     "அதனால் என்ன?... நாட்டுக்காக உயிரை விடறது புண்ணியம் அல்லவா?.. எல்லாருக்கும் கெடைக்குமா அந்த வாய்ப்பு?.... மிலிட்டரிக்காரனெல்லாம் ஊரைக் காக்கிற எல்லைச்சாமி மாதிரி.... நாட்டைக் காக்குற காவல் தெய்வம்ங்க!... என்னோட ரெண்டாவது பையனையும் மிலிட்டரிக்கு அனுப்பத் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்!".

 

    பஸ் வந்ததும் அந்தப் பெண் மட்டும் ஓடிப்போய் ஏறிக் கொள்ள, கோகிலா தன் கால்களை வீடு நோக்கித் திருப்பினாள்.

 

      கதவு தட்டப்பட எழுந்து போய்த் திறந்த பூபதி, திரும்பி வந்த அம்மாவைத் திகைப்போடு பார்க்க, "டேய்.... அந்த போலீஸ் அப்ளிகேஷனை இன்னிக்கே போட்டுடு" என்று சொல்லி விட்டு உள் அறையை நோக்கி நடந்தாள் கோகிலா.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோயமுத்தூர்.