" />

tamilnadu epaper

"விடாது கடன்"

"விடாது கடன்"

தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமியைத் தட்டி எழுப்பினாள் மகள் கோகிலா.

 

   அவள் பின்னால் நின்று கொண்டிருந்த முண்டாசுக்காரன், "சாமியோவ்... இழவு சேதி சொல்ல வந்திருக்கேன் சாமியோவ்" என்றான்.  

 

    எழுந்தமர்ந்தார் கந்தசாமி.

 

    "தெக்காலத் தோப்புல உங்க சினேகிதர் செங்கோடன் மாரடைச்சு இறந்துட்டாருங்க" என்றான். 

 

   "அடப்பாவமே!.. சரி...சரி நீ முன்னாடி போ... நான் பின்னாடியே வர்றேன்" என்று சொல்லி, அவன் கையில் இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்தனுப்பி விட்டு மனைவி செண்பகத்திடம், "தெக்காலத் தோப்பு செங்கோடன் மண்டையைப் போட்டுட்டானாம்..." சொல்லிக் கொண்டு கிளம்பினார். 

 

  மனசுக்குள் சந்தோஷம். "மூணாம் பேருக்குத் தெரியாம அந்த செங்கோடன் கிட்ட வாங்கின இருபதாயிரத்தை அப்படியே அமுக்கி விட வேண்டியதுதான்" முடிவு செய்து கொண்டார்.

 

 சவத்தை சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரிக்கும் வரை இருந்து விட்டு, சாவு வீடுகளில் இரவு நேரத்தில் ரகசியமாக வழங்கப்படும் உற்சாக பானத்தை திருப்தியாக ஊற்றிக் கொண்டு வீட்டை நோக்கி நடை போட்டார்.

 

  கால்கள் தள்ளாடின. சிரமப்பட்டு சிறிது தூரம் நடந்திருப்பார் ,பின்னாலிருந்து ஏதோ சத்தம் கேட்க, நின்று திரும்பினார்.

 

 எங்கிருந்தோ ஒரு காளை மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி வந்து அவரது அடிவயிற்றில் தன் இரு கொம்புகளையும் செருகி, அவரை மேலே தூக்கி, அந்தரத்தில் பறக்க விட்டு விட்டு, ஓடிப் போனது.

 

 "தொபீர்"ரென்று வீழ்ந்தவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

 

   கண் விழிக்கும் போது ஒரு மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தார். வயிற்றை சுற்றி பெரிய கட்டு.

 

   மூன்று மாதத்திற்குப் பின் வீடு திரும்பியவர் படுத்திருந்தவாறே, மனைவியிடம் கேட்டார். "ஆஸ்பத்திரி செலவு எவ்வளவு ஆச்சுடி?" கேட்டார்.

 

   "மொத்தமா இருபதாயிரம் ஆச்சு... " என்றாள் செண்பகம்.

 

   அதிர்ந்து போன கந்தசாமி உடனே சுதாரித்துக் கொண்டு, "யாரோட காளை மாடுடி அது... என்னைக் குத்தியது?" கேட்டார்.

 

   "செத்துப் போனாரல்ல உங்க சிநேகிதரு... செங்கோடன்?... அவர் செல்லமாக வளர்த்த காளையாம்!" என்றாள் செண்பகம்.

 

  "அடேய்... செங்கோடா... உனக்குத் தர வேண்டிய இருபதாயிரத்தை ஆட்டையப் போடுடலாம்!னு நினைச்சேன்.... ஆனா நீ உன்னோட மாட்டை அனுப்பி வசூல் பண்ணிட்டியேடா!... ஹும்... அடுத்தவன் காசுக்கு ஆசைப்பட்ட எனக்கு...இதுவும் வேணும் இன்னமும் வேணும்!" உள்ளுக்குள் புழுங்கினார்.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை